புண்ணியம் நிறைந்த புரட்டாசி பவுர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல ஏற்ற நேரம் எது?
திருவண்ணாமலை: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பவுர்ணமி தின சிறப்பு வாய்ந்தது எனவே திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. யார் பெரியவர் என்று பிரம்மாவும் விஷ்ணுவும் மோதிக்கொண்டு, ஈசனின் அடிமுடி காண விரைந்த தலம் திருவண்ணாமலை. அக்னியே குளிர்ந்து மலையாகி, ஈஸ்வர அம்சமாக உள்ள இடம் திருவண்ணாமலை.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். கிரிவலம் வரும் போது தரிசிக்க வேண்டிய கோவில்கள் உள்ளன. கிரிவலம் வருவதற்கு ஒரு முறை உள்ளது. அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வந்து மீண்டும் ராஜ கோபுரத்தில் முடிக்க வேண்டும்.
அண்ணாமலையாரே ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார். கார்த்திகை மாதம் தீபம் திருவிழா முடிந்து கிரிவலம் வருவார். அதே போல தை மாதம் 2ஆம் நாள் கிரிவலம் வருவார். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும், ஆசிரமங்களையும், கோவில்களையும் தரிசனம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி நாளை வியாழக்கிழமை மாலை 6.46 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்
மாதந்தோறும் பவுர்ணமிகள் வந்தாலும் புரட்டாசி பவுர்ணமிக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இந்த நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் முன்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும். நடுநிசியான புரட்டாசி மாதத்தில் முழு நிலவு நாளான பெளர்ணமி என்பது அம்பிகையின் அருள் அதிகரிக்கும்.
புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பௌர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் இறைசக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதால் தெய்வ அனுகிரகம் வீடு தேடி வரும். எனவே இந்த புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வருவது சிறப்பானது என்பதால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வருகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 28ஆம் தேதியும் 29ஆம் தேதியும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications