கோவை வெள்ளியங்கிரி மலையின் ரகசியங்கள் தெரியுமா? இங்கு யாரெல்லாம் செல்லக் கூடாது?
கோவை: கோவையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும் வெள்ளியங்கிரி மலையின் ரகசியங்கள் என்னவென தெரிந்து கொள்ளுங்கள். இங்கு 50 கி.மீ. நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து ஏவி தமிழ் ஸ்டோரி எனும் யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: பெருமாளுக்கு ஏழு மலைகள் இருப்பது தெரியும். சிவனுக்கு ஏழு மலைகள் எது தெரியுமா? கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது வெள்ளியங்கிரி மலை!

இது மேகங்கள் சூழ வெள்ளியால் வார்க்கப்பட்டது போல் காட்சி அளிப்பதால் இது வெள்ளியங்கிரி என அழைக்கப்படுகிறது. இது ஏழுமலை தொடர்களை கொண்டதாகும். இதன் 7ஆவது மலையில்தான் வெள்ளியங்கிரி நாதர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
கோவை மாவட்டம்
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை சிவபெருமானின் ஏழுமலை என்றும் தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளியங்கிரி மலை பூண்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. பசுமையும் அழகும் கொண்ட வனங்கள் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் அமைந்திருக்கும் சிவ தலமான இந்த வெள்ளியங்கிரி மலையில் உள்ள கோயிலுக்கு சுமார் 50 கிலோ மீட்டர் நடைப்பயணம் கொண்ட புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
புனித யாத்திரை
அவ்வாறு புனித யாத்திரை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த மலை அடிவாரத்தில் உள்ள கோயிலிலேயே வழிபட்டு திரும்பலாம். பிரசித்தி பெற்ற புனித தலமாக விளங்கும் இந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் சுயம்பு லிங்கமாக சிவபெருமான் காட்சியளிக்கிறார்.
ஆகாயம்
நீர், நிலம், அக்னி, வாயு மற்றும் ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமைய பெற்ற தலமாக இது விளங்குகிறது. இங்கு சிவன் பஞ்சலிங்கேசனாக 6 அடி அகலமுள்ள சிறிய குகையில் அருள்புரிகிறார். ஏழு மலை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது திருமலை திருப்பதிதான்.
7 மலை
சைவ கடவுளான சிவபெருமானுக்கும் 7 மலை திருத்தலமாக திகழ்கிறது வெள்ளியங்கிரி மலை! இது சிவபெருமானின் காலடி பட்ட மலை என்றும் இங்கு சில காலம் ஈசன் தனது மனைவி பார்வதி தேவியுடன் தங்கியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
6 ஆயிரம் அடி உயரம்
கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலை கோயில் அமைந்துள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு செல்லும் இதன் பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைகட்டி சுனை, சீதை வனம், அர்ஜுனன் வில், பீமன் கலி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்கள் உள்ளன.
மலையின் அடிவார பகுதி
மலையின் அடிவார பகுதி பூண்டி என்று அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி நாதர்- சவுந்தர்ய நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இவர்களுடன் விநாயகர், முருக பெருமான் உள்ளிட்ட தெய்வச் சிலைகளும் காணப்படுகின்றன.
புனிதப்பயணம்
இந்த புனிதப்பயணம் மேற்கொள்ள கடுமையான முயற்சிகள் வேண்டும். ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் இது போற்றப்படுகிறது. சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடம் இது என்பதால் சித்தர்கள், யோகிகள் , ஞானிகள் பலரும் காலம் காலமாக தவம் புரிந்தும் வாழ்ந்தும் வருவதாக சொல்கிறார்கள்.
தட்சிண கைலாசம்
இந்த மலை ரத்தினகிரி, தட்சிண கைலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் மற்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இந்த மலையில்தான் உமையாள் பார்வதிதேவியின் கோரிக்கைக்கு இணங்க பிரணவ தாண்டவத்தை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது. குறிப்பாக சித்ரா பவுர்ணமி பண்டிகை நாட்களின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறார்கள்.
சூரிய உதயம்
வெள்ளியங்கிரி மலையில் அதிகாலை நிகழும் சூரிய உதயம் நாம் தவற விடக் கூடாத விஷயங்களில் ஒன்றாகும். படர்ந்திருக்கும் பனி மெல்ல விலக இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் கரம் பரப்புவது பார்க்க கண் கொள்ளா காட்சியாகும்.
யாரெல்லாம் ஏறக் கூடாது
வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரண காரியம் அல்ல. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் இருப்பவர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வெள்ளியங்கிரி மலையேறுவது என்பது உயிருக்கு ஆபத்தாக முடியும். இந்த மலையேற்றத்திற்கு சுமார் 5 மணி நேரமாகும் என்கிறார்கள். மலையில் ஏறுவது மிகவும் சுலபம், ஆனால் இறங்குவது மிகவும் கடினம். அதனால்தான் மூங்கில் கம்பை உடன் கொண்டு செல்கிறார்கள். கோவை நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இவ்வாறு அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications