இந்த ஒரு காரியம்..லட்சுமி அருளால் வீட்டில் ஊற்று போல பண வரவை அதிகரிக்கும்..சில தவறுகளை செய்யாதீர்கள்
நாம் செய்யும் சில நல்ல விசயங்கள் நமக்கு பண வருமானத்தை அதிகரிக்கும். மகாலட்சுமியின் அருளினால் செல்வ வளத்தை அதிகரிக்கும்.
சென்னை: நம்முடைய செல்வம் அதிகரிக்க வேண்டும்.. நமக்கு குறைவில்லாத வருமானம் வர வேண்டும்..கடன் பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்றால் சில விசயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் நமக்கு சில கஷ்டங்களை கொடுத்து விடும். பண வருமானத்தை தடுத்து கடன் பிரச்சினையில் தள்ளி விடும். மறந்தும் கூட சில தவறுகளை நாம் செய்யக்கூடாது. மகாலட்சுமி தேவி செல்வத்திற்கு அதிபதி. அன்னை லட்சுமி தேவியின் அருளைப் பெற வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
பணம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அன்றாட தேவைகளை சமாளிக்கவும், செலவுகளுக்காகவும் பணம் தேவைப்படுகிறது. வேலை செய்து சம்பாதிக்கும் பணம் சில நேரங்களில் விரைய செலவாகி விடும். சில நேரங்களில் தொலைந்து போய் விடும். சிலருக்கு அவசிய தேவைக்கு கூட வருமானம் இல்லாமல் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

நம்முடைய வீட்டில் செல்வ செழிப்பு ஏற்பட வருமானம் அதிகரிக்க சில காரியங்களை செய்ய வேண்டும். நிலைவாசல் என்பது மகாலட்சுமியை வரவேற்கும் இடம். அந்த நிலைவாசலில் தேவையற்ற ஆணிகளை அடித்து காயப்படுத்த கூடாது. அதே போல தலைவாசலை மறைத்து எதுவும் செய்யக்கூடாது. நம்முடைய தலைவாசல் வழியாகத்தான் தெய்வத்தின் அருள் வீட்டிற்குள் வரும் எனவே தலை வாசல் பகுதியை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும். அதே போல ஈசான்ய மூலை பகுதியையும் சுத்தமாக வைக்க வேண்டும். அப்போதுதான் வருமானம் குறைவின்றி வரும்.
காலையில் கண் விழிக்கும் போதே உள்ளங்கை, கோவில் கோபுரம், சாமிபடங்களில் கண் விழிப்பது நல்லது. வலம்புரிச்சங்கு பூஜை அறையில் வைத்திருப்பது நல்லது. துளசி, நெல்லி, மருதாணி மரங்களை வளர்ப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும். இந்த மூன்றும் இருக்கும் இடங்களில் மகாலட்சுமியின் அருள், குபேரன் அருள் நிறைந்திருக்கும். எந்தவித தீய சக்தியோ கண் திருஷ்டியோ அணுக முடியாது.
தினசரியும் துளசி செடிக்கு முன்பாக கோலம் போட்டு விளக்கேற்றி வர நன்மைகள் அதிகரிக்கும்.
நம்முடைய வீட்டில் இருந்து நாம் கொடுக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அதை தலைவாசற்படியில் நின்று கொண்டு தரக்கூடாது. கீழே இறங்கிதான் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வீட்டிற்குள் கூப்பிட்டு தர வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறுவார்கள். எதையும் காரணமில்லாமல் நம்முடைய வீட்டு பெரியவர்கள் சொல்ல மாட்டார்கள். நிலைவாசல்படியில் உள்ள மகாலட்சுமி நாம் கொடுக்கும் பணத்தோடு பிறருடன் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி சொல்லி வைத்திருக்கின்றனர். வீட்டு தலைவாசல் படியில் தலைவிரி கோலத்துடன் அமரக்கூடாது என்றும் பெரியவர்கள் சொன்னது கூட இதனால்தான்.
பொதுவாக வீட்டில் விளக்கேற்றிய பிறகு பால், தயிர், உப்பு யாருக்கும் கொடுக்கக்கூடாது. கிழிந்த துணிகளை தைக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஒருவருக்கு பணத்தை கொடுக்கும் போது செவ்வாய்கிழமை அல்லது செவ்வாய் ஹோரையில் கொடுப்பது நல்லது. அந்த பணம் நமக்கு நல்ல முறையில் திரும்ப வரும்.
நம்முடைய வீட்டில் எப்போதும் நல்ல சொற்களே பேச வேண்டும். பிறரைப் பற்றி கூறும் தவறான வார்த்தைகளால் நம்முடைய வீட்டில் உள்ள மகாலட்சுமியை கோபப்படுத்தி விடும். எனவேதான் பிறர் மனம் வாடும் வகையில் சொற்களை பேசக்கூடாது. அமலங்கலமான சொற்களை பேசக்கூடாது. எண்ணம் போல வாழ்க்கை என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர். நல்ல எண்ணங்களுடன் நல்ல சொற்களை பேச வேண்டும்.
உப்பு, அரிசி, தானியங்களை தரையில் சிந்தக்கூடாது. நம்வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை பொதுவாக செவ்வாய், வெள்ளிக்கிழமை வாங்குவது நல்லது. அப்படி வாங்க முடியாவிட்டால் மஞ்சள், கல் உப்பு மட்டுமாவது வெள்ளிக்கிழமை வாங்குவது நல்லது. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சிறிதளவு கல் உப்பு,மஞ்சள் இவற்றை தண்ணீரில் கரைத்து வீட்டிற்குள்ளேயும்,வீட்டு வாசலிலும் தெளிக்க வேண்டும். இதனால் வருமானம் குறைவின்றி வரும்.
நம் வீட்டின் பூஜை அறையில் தினசரியும் விளக்கேற்றுவது நல்லது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முக விளக்கேற்றினால் கூடுதல் நன்மை. பூஜை அறையில் அகல் விளக்கேற்றி வழிபட்டால் நம்முடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். ஏற்றிய விளக்கை தானாக குளிர விடக்கூடாது. ஊதியோ, கைகளால் தட்டியோ அணைக்கக்கூடாது. கல்கண்டு, பூக்களைக் கொண்டுதான் விளக்கை குளிர்விக்க வேண்டும்.
மளிகை சாமான்கள் வாங்கும் போது ஊறுகாய் வாங்குவது நல்லது. செல்வ வளத்தை அதிகரிக்கக் செய்யும். காரணம் ஊறுகாய் குபேரனுக்கு பிடித்தமானது. நம்முடைய வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு முதலில் குடிக்க தண்ணீர் தர வேண்டும். குங்குமம், மஞ்சள்,பூக்கள் கொடுத்து வழியனுப்பி வைக்க வேண்டும்.
பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் இருக்கக் கூடாது. நகத்தை கடித்து வீட்டிற்குள் துப்பக்கூடாது. குப்பைகளை அதிகம் சேர விடக்கூடாது. ஒட்டடை தூசி அதிகம் சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வீட்டு வாசலில் கோலம் போடுவது அவசியம். மகாலட்சுமியின் அருள் நிரந்தரமாக நம் வீட்டிற்குள் கிடைக்க சாம்பிராணி புகை போட்டு வீட்டை நறுமணத்துடன் வைத்திருப்பது நல்லது. வீடு தூய்மையாகவும் வாசனையாகவும் இருந்தாலே செல்வ வளம் அதிகரிக்கும்.
பணம் வைக்கும் இடத்தில் கிராம்பு, ஏலக்காய் போன்றவைகளை போட்டுவைத்தால் பண வரவு அதிகரிக்கும் வீண் விரைய செலவு குறையும். வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றி பால் ஏலக்காய் சேர்த்து நைவேத்தியம் செய்து வழிபட செல்வ வளம் அதிகரிக்கும்.
நம்முடைய வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து, வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும். நம்முடைய வராக்கடன்கள் வசூலாகும்.பணம் மிச்சமாகும். இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் தண்ணீர் ஊறும். எனவே நம்முடைய வீட்டில் செல்வம் அதிகரிக்க நாம் இல்லாதவர்கள், ஏழைகளுக்கு நிறைய தர்மம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்குவார்.












Click it and Unblock the Notifications