தை அமாவாசை நாளில் பொதுமக்கள் ராமேஸ்வரத்தில்.. தர்ப்பணம் கொடுப்பது ஏன் தெரியுமா?
ராமேஸ்வரம்: பொதுவாக தை அமாவாசை நாளன்று இந்துக்கள் ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் தருவார்கள். ஒவ்வொரு அமாவாசை நாளிலும் தர்ப்பணம் தருவது நல்லது என்றாலும் தை அமாவாசை நாளன்று ராமேஸ்வரத்தில் தருவது ரொம்பவே புண்ணியமாக கருதப்படுகிறது. குறிப்பாக ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் தருவது ஏன் புண்ணியமாக கருதப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்து மதத்தில் அமாவாசை முக்கிய நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குப் படையல் தருவார்கள்.

தை அமாவாசை:
அதில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை (புரட்டாசி) மற்றும் தை அமாவாசை ஆகியவை முக்கியமானதாகும். குறிப்பாக தை மாதம் வரும் அமாவாசை ரொம்பவே உகந்த நாளாகக் கருதப்படுகிறது. எல்லா அமாவாசை நாட்களிலும் மூதாதையர்களுக்குப் படையல் கொடுக்க முடியாதவர்கள் கூட இந்த தை அமாவாசையின் போது மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் தருவார்கள்.
முன்னோர்களுக்காக அவர்களின் ஆண் வாரிசுகள், அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதே தர்ப்பணமாகும். வழக்கமாக பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்காகச் செய்யப்படும். நீர் நிலைகளில் மந்திரங்கள் ஒலிக்க பித்ரு தர்ப்பணம் செய்யப்படும். வீட்டில் எள்ளும் தண்ணீரும் இரைத்து, காகத்திற்குச் சாப்பாடு வைத்து, முன்னோர்களுக்குத் தனி இலையில் படையல் போடுவதே தர்ப்பணமாகும். மேலும், பசு மாட்டிற்கு அகத்திக்கீரை எள் மற்றும் வெல்லம் அளிப்பதும் தானம் செய்வதும் தர்ப்பணமாகும்.
தர்ப்பணம்:
ஒவ்வொரு மாதம் அமாவாசை தினத்தன்று இதுபோல தர்ப்பணம் செய்தால் மூதாதையர்களுக்கு ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் செய்ய முடியாதவர்கள் கூட முன்பே குறிப்பிட்டது போல ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
தை அமாவாசை தர்ப்பணம் என்றாலே வட இந்தியாவில் பலருக்கும் கங்கை நதி ஓடும் காசி நகரம் தான் நினைவுக்கு வரும். அதேபோல தென் இந்தியாவைப் பொறுத்தவரை ராமேஸ்வரத்திலேயே தர்ப்பணம் கொடுக்க பலரும் விரும்புவார்கள். இதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்துக்கள் ராமேஸ்வரத்திற்கு வருவார்கள்.
ராமேஸ்வரம் திருக்கோயில்:
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அமாவாசை நாளில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடப் பல ஆயிரம் பேர் வருகை தருவார்கள். தங்கள் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் அளித்துவிட்டு அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். கடற்கரையில் அமர்ந்து வேத மந்திரங்களுடன் கர்ம பூஜையைச் செய்வார்கள்..
என்ன காரணம்:
இந்துக்களின் புனித தளங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் கருதப்படுகிறது.. ராமாயணத்தில் இங்குள்ள அக்னி தீர்த்த கடலுக்கு முக்கிய இடமுள்ளது. அதாவது சீதா தேவி தனது தூய்மையை நிரூபிக்க லட்சுமணனை நெருப்பு மூட்டக் கூறியதாகவும் அந்த நெருப்பில் அமர்ந்த போதும், அந்த தீயால் சீதையைக் காயப்படுத்த முடியவில்லை என்றும் ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. அக்னி கடவுள் தான் சீதையைக் காத்தார் என்பது இந்துக்கள் நம்பிக்கை.
இருப்பினும், சீதையைத் தொட்ட பாவத்தைப் போக்க அக்னி பகவான், கடலில் நீராடி சிவபெருமானை வணங்கிய தலமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.. இதன் காரணமாகவே இங்குத் தர்ப்பணம் கொடுக்க இந்துக்கள் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications