இந்திய சினிமா லோகோ.. எனது ரேஸ் காரில் அச்சிடப் போகிறேன்.. அஜித் குமார் அறிவிப்பு!
சென்னை: இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் இந்திய சினிமாத் துறை என்ற லோகோவை அச்சிட உள்ளதாக நடிகரும், கார் ரேஸ் வீரருமான அஜித் குமார் அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித் குமார் இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். விடாமுயற்சி படப்பிடிப்பின் போதே உடலை குறைக்க தொடங்கிய அஜித் குமார், குட் பேட் அக்லி திரைப்படத்தின் போது ஃபிட்னஸை எட்டினார். இதன்பின் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அஜித் குமார், அதன் பிரத்யேக வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட தொடங்கினார்.

அந்த வகையில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் குமார் அணி 3வது இடத்தை பிடித்து அசத்தினார். இதன்பின் போர்ச்சுகலில் நடந்த கார் ரேஸில் பங்கேற்ற அவர், தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலப்படுத்த வேண்டும். என்னை பிரபலப்பட வேண்டாம். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.
மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்கள் உடல் மற்றும் மனதளவில் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கடுமையான உழைப்பு பலருக்கும் தெரிவதில்லை. ஒருநாள் நிச்சயமாக இந்திய வீரர்கள் ஃபார்முலா ஒன் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள். கார் ரேஸ் வெறும் வேடிக்கையான போட்டி அல்ல என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதலே கார் ரேஸில் ஆர்வம் காட்டி வரும் அஜித் குமார், அக்டோபர் மாதம் முதல் சினிமாவுக்கு திரும்ப உள்ளார். அவரின் அடுத்தப் படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் குமார் தனது கார் ரேஸில் இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் வகையில் தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் இந்திய சினிமாத் துறை என்ற லோகோவை அச்சிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications