அன்னை இல்லம் வீட்டில் சத்தமில்லாத உதவி.. சிவாஜி கணேசனின் அப்பாவின் சிலை முன்பு நடிகர் பிரபு எமோஷனல்
சென்னை: எந்த கேரக்டராக இருந்தாலும், அதற்கேற்றவாறு பாடிலேங்குவேஜ், முக பாவனை என தன்னுடைய தத்ரூபமான நடிப்பின் மூலம், தமிழக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. நேற்று அவரது நினைவு நாளாகும்.. நடிகர் திலகத்தின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய நடிகர் பிரபு, "அப்பா விட்டுச் சென்ற மூச்சுக்காற்றைதான் நாங்கள் சுவாசித்து வருகிறோம், அதுதான் இந்த ரசிகர்கள்" என்று சிவாஜி கணேசனின் நினைவுநாளில் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்னுடைய நடிப்புத் திறமையால் கட்டிப்போட்டிருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... ஆரம்ப காலங்களில் நாடகங்களில் பெண் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்..

சிவாஜி கணேசன் நடிப்பு
மாமன்னர் 'சத்ரபதி சிவாஜி' நாடகத்தில் நடித்ததினால், சிவாஜி கணேசன் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்... முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வசனத்தால் உருவான பராசக்தி படத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே தமிழக மக்களின் கவனத்தை திருப்ப செய்தார் சிவாஜி கணேசன்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் மொத்தம் 288 படங்களில் நடித்துள்ளார். இதில் 275 படங்கள் தமிழ்ப் படங்கள் ஆகும்..
தனக்கென பிரத்யேக ஸ்டைல், பாடிலேங்குவேஜ், தமிழ் உச்சரிப்பு, கேரக்டருக்கு ஏற்றவாறு முகபாவனைகள் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர்.. இன்றுவரை சிவாஜி கணேசனின் இடத்தை நிரப்ப, தமிழ் சினிமாவில் யாருமில்லை..
மிகப்பெரிய விருதுகள்
சர்வதேச அரங்கில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற முதல் இந்தியரும் சிவாஜி கணேசன்தான். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை வென்ற முதல் இந்திய நடிகரும் சிவாஜி கணேசன்தான்..
திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதாசாகிப் பால்கே விருது, மத்திய அரசின் பத்ம ஶ்ரீ , பத்ம பூஷன் விருதுகளை பெற்றுள்ளார் டாக்டர் சிவாஜி கணேசன்.. கடைசிவரை சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.. எண்ணம், செயல், சிந்தனை என அத்தனையும் நடிப்பு மட்டுமே என்று வாழ்ந்துவிட்டு மறைந்தவர் சிவாஜி கணேசன்... அரசியலில் நுழைந்து தோல்வி கண்டாலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை சத்தமில்லாமல் செய்தவர்.. அதிலும் அன்னை இல்லத்தில் எத்தனையோ பேருக்கு, வியக்கத்தக்க உதவிகளை செய்தவர்.. அவரால் பலன் அடைந்தவர்கள் ஏராளம்.
மணிமண்டபம் - அஞ்சலி
சிவாஜி கணேசன் கடந்த 2001, ஜூலை மாதம் 21ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். நேற்று அவரது 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.. இதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் முழுஉருவ சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பக்கத்திலேயே அவரது உருவப்படம் ஒன்றும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிவாஜி கணேசன் சிலைக்கு அவரது மகனும் நடிகருமான பிரபு மற்றும் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினார்கள்.. பிறகு, இருவரும் மணிமண்டபத்திற்கு சென்றும் பார்வையிட்டனர்..
நடிகர் பிரபு உருக்கம்
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, "சிவாஜி கணேசன் நம்மை விட்டுச்சென்று 24 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் அவரது ரசிகர்களை பார்க்கும்போது அவர் இன்னமும் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் நடிகர் திலகத்தை குடும்ப நண்பர், சகோதரனாக இன்றும் பார்த்து வருகிறார்கள்... சிவாஜி உங்களது அனைவருடைய எண்ணங்களிலும் வாழ்ந்து வருகிறார். என்னுடைய அப்பா.. அனைவரையும் இதயங்கள் என்று தான் சொல்வார்.. அவர் இதயங்கள் அனைவருக்கும் நன்றி.... அப்பா விட்டுச் சென்ற மூச்சுக்காற்றைதான் நாங்கள் சுவாசித்து வருகிறோம், அதுதான் இந்த ரசிகர்கள்" என்று உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
