வயநாடு நிலச்சரிவில் 130 உடல் பாகங்கள் மீட்பு.. மரபணு சோதனை நடத்த திட்டம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 நாள்களாக தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கிய 130 உடல் பாகங்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல் பாகங்களுக்கு மரபணு சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பலத்த மழை கடந்த 29ம் தேதி கொட்டித் தீர்த்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.

சூரல்மலை - முண்டக்கை இடையேயான பாலம் உடைந்ததால் வெள்ளத்தைக் கடந்து ராணுவம், பேரிடர் மீட்புப் படையினரால் நிலச்சரிவு ஏற்பட்ட மலைக்கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சூரல்மலை, முண்டக்கையின் ஒரு பகுதியில் மட்டுமே மீட்புப் பணியில் ஈடுபட முடிந்தது. இதையடுத்து, ராணுவத்தினர் தற்காலிக பெய்லி பாலத்தை இரவு, பகலாக அமைத்து அவ்வழியாக மீட்பு வாகனங்களில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, இன்று 5வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மலைப் பகுதிகளில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மற்றும மோப்பநாய்களின் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட சாலியாற்றில் இருந்து 133 உடல் பாகங்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். உடல் பாகங்களை மருத்துவக் குழுவினர் சேகரித்து, அதன் மூலமாக உயிரிழந்தவர்களை அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. மேப்பாடி மருத்துவமனைக்கு ஏராளமானோர் தங்களது உறவுகளைத் தேடி வந்துகொண்டே இருக்கின்றனர். அங்கி சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்த்துவிட்டு, பிணவறைக்குச் சென்று உடல்களைப் பார்க்கச் செல்கிறார்கள். பலரது உடல்கள் உருக்குலைந்து கிடப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 94 அடையாளம் தெரியாத உடல்கள் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரிகளால் எரியூட்டப்பட்டன. 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பதால் அவர்களது தொலைபேசி ஜிபிஎஸ் சிக்னல் வாயிலாக கடைசியாக இருந்த இடத்தைக் கண்டறிந்து உடல்களை மீட்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications