"ரூ.34 கோடி ரத்த பணம்.." சவுதியில் 18 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் விடுதலையாகும் கேரள நபர்!
திருவனந்தபுரம்: சவுதியில் சிறுவன் மரணம் தொடர்பாகக் கடந்த 18 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் ரஹீம் ஒரு வழியாக இப்போது விடுதலை ஆக உள்ளார். சிறுவன் குடும்பத்தினர் கேட்ட ரூ.34 கோடி இழப்பீட்டுப் பணம் கிரவுட் ஃபண்டிங் மூலம் திரட்டப்பட்டது. இந்த தொகை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிலையில், அப்துல் ரஹீம் மிக விரைவில் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். வேலைக்காக சவுதி சென்ற இவர், அங்கு டீனேஜ் சிறுவனைக் கொன்ற குற்றச்சாட்டில் கடந்த 18 ஆண்டுகளாக அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த சவுதி சிறுவனின் மரணம் என்பது எதிர்பாராத வகையில் நடந்த விபத்து என்றே கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கில் தான் அப்துல் ரஹீம் கடந்த 18 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்.
விரைவில் விடுதலை: பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு Blood money எனப்படும் ரத்த பணம் கொடுத்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் கேட்ட இழப்பீட்டுத் தொகை கடந்த மே மாதம் தான் வெளியுறவுத் துறை மூலம் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவரை விடுவிக்கும் பணிகள் தொடங்கியது.
இந்தச் சூழலில் தேவையான அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்ட நிலையில், அப்துலை விடுவிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரஹீமுக்கு அவுட் பாஸ் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து அவர் நேரடியாகக் கேரளாவுக்கு விமானத்தில் திரும்பலாம்.
அதென்ன ரத்த பணம்: நமது நாட்டில் க்ரைம் வழக்கில் ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அவருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுக்கும். பாதிக்கப்பட்ட நபர் மன்னித்தாலும் மன்னிக்காவிட்டாலும் குற்றவாளிக்கு எந்தவொரு சலுகையும் இருக்காது. ஆனால், சில இஸ்லாமிய நாடுகளில் அப்படி இல்லை. எந்தவொரு குற்றத்திற்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரத்த பணத்தைக் கொடுத்து அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தால், குற்றவாளி விடுவிக்கப்படுவார்.
அதாவது இந்த ரத்தப் பணம் என்பது பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் நிதி இழப்பீடு என்று சொல்லலாம். இந்த ரத்த பணம் எவ்வளவு தேவை என்பதைப் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரே முடிவு செய்வார். அதன்படி இந்த வழக்கில் சவுதி சிறுவனின் குடும்பத்தினர் 15 மில்லியன் சவூதி ரியால்களை (இந்திய மதிப்பில் ரூ.34 கோடி) இழப்பீடாகக் கேட்டிருந்தனர்.
கிரவுட் ஃபண்டிங்: கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டப்பட்டது. இதற்காக அப்துல் ரஹீம் சட்ட உதவிக் குழு என்ற பெயரில் கமிட்டியும் தொடங்கப்பட்டது. கேரளா மற்றும் உலகெங்கும் ரஹீமிற்காக நிதி திரட்டப்பட்டது. ரத்த பணத்திற்காக கேரளாவில் இவ்வளவு பெரிய நிதி திரட்டப்படுவது இதுவே முதல்முறையாகும். சிறுவனின் குடும்பத்தினர் கேட்ட ரூ.34 கோடி ரத்த பணம் திரட்டப்பட்ட நிலையில், கடந்த மே 23ம் தேதி சவுதியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதிமன்றம் இது குறித்த தகவலை முறையாகத் தெரிவித்தது. அதாவது ரத்த பணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பணத்தை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், திரட்டப்பட்ட தொகையும் சவுதி நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பணத்தைப் பெற்றுக் கொண்ட நிலையில், அப்துலை விடுவிக்கும் பணிகள் நடந்தது.
என்ன நடந்தது: கோழிக்கோட்டில் உள்ள ஃபெரோக் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர் ரஹீம்.. இவர் 26 வயதாக இருந்தபோது, வேலை தேடி சவுதி சென்றுள்ளார். அங்கே ஒரு குடும்பத்தில் இவர் டிரைவராகவும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பராமரிப்பாளராகவும் சேர்ந்துள்ளார். சிறுவன் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவன் சுவாசிக்கப் பிரத்தியேக கருவி கழுத்தில் பொருத்தப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்த அன்று அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு ரஹீம் வெளியே சென்றுள்ளார். அப்போது சாலையில் சிவப்பு சிக்னல் இருந்த போதிலும், அதைத் தாண்டி செல்லுமாறு சிறுவன் கலாட்டா செய்ததாக ரஹீம் கூறுகிறார். அப்போது சிறுவனைக் கட்டுப்படுத்த முயன்றபோது, எதிர்பாராதா விதமாக அந்த கருவி கழுத்தில் இருந்து விழுந்துவிட்டது. இதையடுத்து சிறுவன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.












Click it and Unblock the Notifications