"பேப்பர் போதவில்லை!" தம்பி மீது வைத்த அன்பை காட்ட.. 434 மீட்டர் நீள கடிதம் எழுதிய அக்கா! நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் தனது தம்பி மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது அக்கா செய்த செயல் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தம்பி மீது அக்கா வைத்திருக்கும் அன்பு என்பது தாயின் எல்லையற்ற அன்புக்குச் சற்றும் குறையாதது. ஒருவரை ஒருவர் பார்க்காமல் தொலைவில் இருந்தாலும் அக்கா- தம்பி அன்பு தொடர்ந்து வலுவடையவே செய்யும்!
இந்த நவீன ஸ்மார்ட் யுகத்தில் இப்போதெல்லாம் நாம் யாரையாவது மிஸ் செய்வது போல இருந்தால், டக்கென ஃபோனை எடுத்துப் பேசிவிடுவோம் அல்லது மெசேஜ் அனுப்புவோம்.

வாழ்த்து இல்லை
பிறந்த நாள், திருமண நாள் போன்ற சிறப்பு நாட்களில் இந்த உரையாடல் நீண்டு இருக்கும். இதனிடையே கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேட்டைச் சேர்ந்த பொறியாளர் கிருஷ்ணப்பிரியா. இந்த ஆண்டு உலக சகோதரர்கள் தினத்தன்று அவரது செல்ல தம்பி உடன் இருக்க முடியவில்லை. வேலையும் அப்போது அதிகமாக இருந்ததால், வாழ்த்தக் கூட முடியவில்லை.

கடுப்பான தம்பி
சர்வதேச சகோதரர் தினத்தன்று 21 வயதான சகோதரர் கிருஷ்ண பிரசாத், தனது அக்காவிடம் இருந்து வாழ்த்தைப் பெறக் காத்திருந்தார். இது குறித்து அவர் அனுப்பிய மெசேஞ்சுக்கும் ரிப்ளே இல்லை. மேலும், மற்றவர்கள் அவருக்கு அனுப்பிய சகோதரர்கள் தின வாழ்த்துக்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது அக்காவுக்கு அனுப்பி இருந்தார் கிருஷண்ட பிரசாத். இதனால் மிகவும் சோகமடைந்த கிருஷ்ண பிரசாத், விரக்தியில் அவரை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்துவிட்டார்.

அக்கா தம்பி
இது குறித்து கிருஷ்ணப்பிரியா கூறுகையில், "நான் சகோதரர் தினத்தன்று அவரை வாழ்த்த மறந்துவிட்டேன். நான் வழக்கமாகச் சகோதரர் தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வேலையில் பிஸியாக இருந்ததால் மறந்துவிட்டேன். மற்றவர்கள் வாழ்த்தி அனுப்பி இருந்த ஸ்கிரீன் ஷாட்களை நான் பார்த்தேன். நாங்கள் அக்கா- தம்பியைத் தாண்டி, தாய்-மகன் போன்ற உறவை வைத்துள்ளோம். அவர் வாட்ஸ்அப்பில் என்னை பிளாக் செய்தது உண்மையில் வருத்தத்தை ஏற்படுத்தியது" என்றார்,

பேப்பர் போதவில்லை
செய்த தவறை சரி செய்யும் வகையில், அவர் கடந்த மே 25இல் அவருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினார். ஒரு A4 பேப்பரை எடுத்து தனது கடிதத்தை அவர் எழுதத் தொடங்கினார். ஆனால் அவள் விரும்பிய அனைத்தையும் எழுத அந்த பேப்பர் போதவில்லை. மேலும் கிருஷ்ண பிரியா கூறுகையில், "எனக்கு நீளமான பேப்பர் தேவைப்பட்டது. ஸ்டேஷனரி கடை சென்ற போது, நீளமான பேப்பர் என்றால் பில்லிங் பேப்பர் தான் இருக்கிறது என்றார்கள். இதையடுத்து நான் 15 ரோல்களை வாங்கி எழுதத் தொடங்கினேன். இதை எழுதி முடிக்க எனக்கு 12 மணி நேரம் ஆனது.

5.27 கிலோ
எழுதி முடிந்ததும், அனைத்து ரோல்களையும் ஒன்றாகச் சேர்ப்பது சவாலாக இருந்தது. ஒவ்வொரு ரோலும் 30 மீட்டர் என்பதால் கடிதத்தை பேக் செய்வது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. செலோ டேப் கொண்டு ஒன்றாக இணைத்தேன். ஃபோஸ்ட் ஆபிஸ் சென்ற போது, அது 5.27 கிலோ எடை இருந்தது. அவர்களும் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் கடிதத்தை வாங்கிக் கொண்டனர்" என்று அவர் தெரிவித்தார்.

குழப்பம்
இந்த கடிதம் அவரது சகோதரரிடம் சென்று சேர இரண்டு நாட்கள் ஆகியுள்ளது. முதலில் அவரது சகோதரர் கிருஷ்ண பிரசாத் சற்று குழம்பிவிட்டார். அதை அவர் பிறந்தநாள் பரிசு என்று தவறாக நினைத்துவிட்டார். பிறந்தநாளுக்கு இன்னும் பல நாட்கள் இருக்கும் போது, அதுகூட தெரியாமல் தனது அக்கா பிறந்தநாள் பரிசை அனுப்பி உள்ளதாக நினைத்துள்ளார் கிருஷ்ண பிரசாத். ஆனால், அதைப் படிக்க ஆரம்பித்த உடன் தான் என்ன விஷயம் என தெரிந்துள்ளது.

கின்னஸ்
தனது மீது வைத்துள்ள பாசத்தைக் காட்டும் வகையில் அக்கா எழுதிய இந்த பெரிய கடிதத்தைப் பார்த்து சற்று நெகிழ்ந்து போய்விட்டார் என்றே சொல்ல வேண்டும். அக்கா தம்பிக்கு இடையே நிலவிய சண்டையை இந்த மெகா கடிதம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதுவரை எழுதப்பட்ட மிக நீண்ட கடிதம் என்ற சாதனைக்காக கின்னஸ் உலக சாதனைக்கும் கிருஷ்ணப்பிரியா விண்ணப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications