கட்டுக்கட்டாக பணம்; மண்ணுக்குள் புதைந்து கிடந்த பண்டல்! தொடரும் வயநாடு சோதனை
வயநாடு: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதிகளில் நடந்து வரும் மீட்புப் பணியின்போது மண்ணுக்குள் கட்டுக்கட்டாக புதைந்து கிடந்த பணத்தை அதிகாரிகள் மீட்டு எடுத்துள்ளனர்.
கடந்த ஜூலை 30 இரவு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, பூஞ்சேரி மட்டம், மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளரிமலா, பொத்துகலு உள்ளிட்ட பல கிராமங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 360 பேர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் நிலை குறித்து தெரியவில்லை. அடையாளம் காண முடியாத சுமார் 166 உடல் பாகங்களும் கிடைத்துள்ளன.

ஒட்டு மொத்தம் 4,833 மக்கள் இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 6 நாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் பேரிடர் குழு அதிநவீன ரேடார்கள், ஆளில்லா விமானங்கள், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தேடுதல் படலம் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த இயற்கைப் பேரழிவுகளைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை அன்று பார்வையிட்டார். டெல்லியிலிருந்து கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றார். பின்னர் மேப்பாடி பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருந்தார்.
இதனிடையே வயநாடு, முண்டக்கை, பூஞ்சேரி மட்டம், சூரல்மலை எனப் பகுதிகளில் தொடர்ந்து 17 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் முழுமையாக மீட்புப் பணிகள் முடியவில்லை. முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகள் முழுக்க தரைமட்டமாகிவிட்டது. அங்கே 400 வீடுகள் இருந்த பகுதியில் 30 வீடுகள் மட்டுமே மிச்சம் உள்ளன.
இந்நிலையில் வெள்ளர்மலை அரசு அலுவலகம் உள்ள பின்புறம் இருந்த ஓடை அருகே தீயணைப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 4 லட்சம் ரூபாய் கட்டுக்கட்டாக மீட்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கவரில் 7 பொட்டலங்களில் ரூபாய் 500 ரூபாய் கட்டுகளும், 5 பொட்டலங்களில் 100 ரூபாய் கட்டுக்கட்டாக இருந்தன. இந்தப் பணத்திற்குச் சொந்தக்காரர் யார் எனத் தெரியவில்லை.
இந்தப் பிளாஸ்டிக் பண்டலில் பணத்தின் உரிமையாளர் யார் என்பதற்கான அடையாளம் எதுவும் இருக்கவும் இல்லை. ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பணக்கட்டு மட்டுமே கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட பணம் காவல்துறையினர் மூலம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
நாடே 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வந்த வேளையில், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் காலை 7 மணியளவில் தேடுதல் மீட்புப் பணி தொடங்கி நடந்து வந்தது. இந்தப் பணியின்போது தீயணைப்புப் படை, என்.டி.ஆர்.எஃப், காவல்துறையினரைத் தவிர, சாலியாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றுவரை தேடுதல் பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நிலச்சரிவிலிருந்து உயிர் பிழைத்தவர்கள், பல்வேறு தன்னார்வல குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்படப் பலர் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் விலைமதிப்பற்ற பொருட்களை ஏதேனும் கிடைக்கின்றதா என சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சேரி மட்டம் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் தேடி வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜூலை 30 அன்று வயநாட்டின் மேப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 124 பேர் காணாமல் போயுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
வயநாட்டின் மேப்பாடி பஞ்சாயத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜான் மத்தாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நிபுணர் குழு தங்களது பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்தப் பேரழிவு எப்படி நடந்தது? நிலச்சரிவு உருவாக என்ன காரணம் போன்ற தரவுகளை இந்தக் குழு மதிப்பிட்டு வருகிறது. பேரிடர் பாதித்த பகுதிகளில் மண்ணுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதையும், இனி வரும் காலத்தில் இங்குள்ள நிலத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் கண்டறிய ட்ரோன் மூலம் LIDAR கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
இது பற்றிப் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “பேரிடர் பாதித்த பகுதியின் வான்வழி புகைப்படங்கள் உட்பட விரிவான தரவுகள் எடுக்கப்படும். முந்தைய நிலப்பரப்பு எப்படி இருந்தது? பேரிடருக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? எந்தெந்த பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது? ஆகியவற்றைத் தெளிவாக அறிய இந்த ஆய்வறிக்கை உதவும். எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் நிலப் பயன்பாட்டை நிர்ணயம் செய்வதில் என்ன தடைகள் உள்ளன என்பதைக் கண்டறியவும் இது பயன்படும்” என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications