கொடைக்கானல் அருகே பயங்கர காட்டுத்தீ.. ஊட்டியில் நிலைமை எப்படி இருக்கு தெரியுமா?
ஊட்டி: அடிக்கிற கோடை வெயிலுக்கு அப்படியே சென்னையில் இருந்து அரைபாடி லாரியில் ஏறியாவது ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ ஓடிப்போய்விடலாம் என்று பலரும் நினைப்பார்கள்.. அந்த அளவிற்கு சூரியன் உக்கிரமாக இருக்கிறார்கள். இந்நிலையில் ஊட்டி கொடைக்கானலில் காட்டுத்தீ போய்விட்டதா, அங்கு வானிலை எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் ஊட்டியை பார்ப்போம்.. மேற்கு தொடர்ச்சி மலையின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் மழை என்பது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை தான் அதிகமாக இருக்கும். அதேபோல் வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் ஓரளவிற்கு இருக்கும். அரபிக்கடலின் காற்றுதான், நீலகிரி மலையை மழையால் குளிர வைக்கும்.

அதேநேரம் மற்ற மாதங்களில் மழை பெய்யுமா என்றால் நிச்சயம் பெய்யும். பொதுவாகவே மேற்கு தொடர்ச்சி மலையின் உயரமான பகுதிகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை அதிக அளவில் பெய்யும். குறிப்பாக நீலகிரியில் கணிசமான கோடை மழை இருக்கும். ஆனால் மார்ச் மாதமான போன மாதம் ஊட்டி உள்ளிட்ட நீலகிரி பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டே பருவ மழை நீலகிரி பகுதியில் போதிய அளவு பெய்யவில்லை.. இந்நிலையில் இந்த ஆண்டும் இதுவரை எதிர்பார்த்த அளவு மழை இல்லை..
இந்நிலையில் நீலகிரியில் நேற்று முதல் முறையாக கோடை மழை சில்லென்ற குளிர் காற்றுடன் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் ஊட்டியிலேயே வாட்டி வதைத்து வந்தது. பகலில் சமவெளியில் உள்ளது போல் 24 டிகிரி வரை வெப்பநிலை இருக்கிறது. இரவில் 12 டிகிரி வரையில் குறைவாகவும் வெப்ப நிலை இருக்கிறது.நேற்று சில்லென்ற குளிர் காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டியில் காலநிலை அப்படியே மாறிக்கிடந்தது. இதனால் நேற்று சுற்றுலா வந்த பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரியில் அடிக்கடி இனி கோடை மழை பெய்தால் அங்கு குடிநீர் பிரச்சனை தீரும் என்றும், வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத்தீ பிரச்சனையும் முடிவுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கொடைக்கானல்: ஊட்டியில் இப்படி என்றால், தமிழ்நாட்டின்இன்னொரு பெரிய கோடைவாசல் தலமான கொடைக்கானலில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. அதேநேரம் காட்டுத்தீயும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 வாரங்களாகவே பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் காணப்படுகிறது. இதனால் காய்ந்த நிலங்கள் அதிகம் உள்ள வனப்பகுதிகள், அரசு நிலங்கள், தனியார் விளை நிலங்கள் போன்றவை திடீரென தீ பற்றி எரிந்து வருகின்றன. அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு சேதம் ஏற்படுவது கடந்த ஒரு மாதமாக நடக்கிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு செல்லும் பிரதான மலைப்பாதையில் குருசடி என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது.. மரம், செடி, கொடிகள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள் தீயில் பற்றி எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் , சுமார் 5 மணி நேரம் போராடி காட்டுத்தீயை அணைத்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் இந்த ஆண்டு வழக்கத்தை விட பல்வேறு இடங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டு வந்தது. இதனிடையே கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேலும் நேற்று நகர் பகுதியில் காலை முதல் மாலை வரை வெப்பம் குறைந்து, மேகமூட்டங்கள் சூழ்ந்து இருந்தது. கடந்த இரு வாரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications