இயர் என்ட்.. ஆனாலும்.. கோவா போறவங்க எண்ணிக்கை குறைஞ்சு போச்சு.. கெடுபிடிதான் காரணம்!
பானாஜி: 2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. இப்படி இயர் என்ட் காலக்கட்டத்திலும் கூட இந்தியாவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கோவாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மளமளவென சரிந்துள்ள நிலையில் அதன் பின்னணியில் அங்கு காட்டப்படும் ‛கெடுபிடி’ தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கோவா.. இந்தியாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும் கூட கோவாவுக்கு என்று தொன்றுதொட்பு தனி மவுசு இருந்து வருகிறது. இதனால் தான் கல்லூரி பயிலும் மாணவர்கள் முதல் முதுமையை எட்டிய முதியவர்கள் வரை பலருக்கும் கோவா சென்று வர ஆசைப்படுகின்றனர்.

கடற்கரையில் ஆனந்த குளியல் போட்டு அங்கு வந்துள்ள பல்வேறு கலாசாரங்களை பின்பற்றும் மக்களை ரசிப்பது, இரவு நேர அவுட்டிங், பார்ட்டி, பப்களில் நடனம் என அனைத்துக்கும் ஏற்ற இடமாக கோவா இருப்பதே அங்கு செல்ல அனைவரையும் துண்டுகிறது.
பொதுவாக லாங்க் வீக்எண்ட் மற்றும் இயர் என்ட் காலக்கட்டத்தில் மக்கள் செல்லும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் கோவாவுக்கு என்று தனிஇடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கோவாவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் படையெடுத்து அங்கேயே புத்தாண்டை வரவேற்பார்கள். இதனால் டிசம்பர் மாதம் வந்தாலே அங்குள்ள ஹோட்டல், விடுதிகளில் முன்பதிவு என்பது முடிந்துவிடும்.

குறிப்பாக டிசம்பர் என்பது குளிர்காலம் என்பதால் பல புதுமண ஜோடிகள் ஹனிமூன் கொண்டாட கோவாவை நாடி செல்வார்கள். இதனால் கோவாவுக்கான முக்கிய வருவாயில் சுற்றுலாத்துறை முதன்மையானதாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது 2023ம் ஆண்டின் இறுதி மாதத்தில் நாம் இருந்தாலும் கூட கோவா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை என்பது மளமளவென சரிந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் என்பது கோவாவில் உள்ள அங்குள்ள ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளுக்கான விதிமுறைகள் என்பது திருத்தம் செய்யப்பட்டுள்ளதான் என கூறப்படுகிறது. அதாவது தற்போது ஏற்கனவே இருக்கும் விதிகளை தவிர்த்து புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாம். அதாவது கோவாவில் பார்ட்டிகளின்போது அதிக ஒலி எழுப்பப்படுவதாக அங்குள்ள மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் இல்லாத இடங்களில் பார்ட்டிகள் நடத்த அனுமதி மறுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து பல ரெஸ்ட்டாரண்ட்டுகள், பார்ட்டி ஹால்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஹோட்டல்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்டு, பார்ட்டி ஹால்களின் உரிமையாளர்கள் தாமாகவே அதனை மூடினர். அதோடு கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாசுக்கட்டுப்பாட்டு துறை சார்பில் உரிமம் வழங்கப்படுவது தாமதமாகி உள்ளது. இதனால் உணவகங்கள், ரெஸ்ட்டாரண்ட்டுகளை திறக்க நினைத்தாலும் அதனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதுபற்றி உணவக உரிமையாளர் மிஸ்பா குவாட்ரி கூறுகையில், ‛‛ஏப்ரல் மாதத்தில் உணவகங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. தற்போது அதிகமாக நடந்து வருகிறது. மாசுக்கட்டுப்பாட்டு உரிமம் இல்லை என எனக்கு நோட்டீஸ் அனுப்பினர். விசாரணைக்கு சென்ற நிலையில் அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை இன்னும் எடுக்கவில்லை. அதோடு உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நான் கடந்த 4 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். இதுபோன்ற நிலையை முன்பு நான் சந்தித்தது இல்லை’’ என்றார்.
மேலும் கோவா பெனோ கபே பார் நிறுவனரான கவுரவ் பரத்வாஜ் கூறுகையில், ‛‛கோவாவில் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா துறை சார்ந்த தொழில்களை வெகுவாக பாதித்துள்ளது. கடற்கரைகளில் குடில்கள் அமைக்க அனுமதி வழங்குவது, உரிமம் தருவது உள்ளிட்வை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவா வருவோரின் எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் 10 நாள் வருமானம் என்பது பிற மாதங்களின் முதல் 10 நாட்களை விட சரிந்துள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கோவாவில் வழக்கமாக களைகட்டிய பார்ட்டிகள் கலையிழந்தன. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை என்பது சரிய தொடங்கி உள்ளது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறைகளிடம் இருந்து உரிமங்கள் பெற்று முறைப்படி இசை நிகழ்ச்சிகள் நடத்தினாலும் மீண்டும் பிரச்சனை வந்துவிடுமோ என உரிமையாளர்கள் நினைக்கின்றனர். இதனால் அவர்கள் ரிஸ்க் எடுக்கவும் தயங்கி வருகின்றனர். இதுபோன்ற கெடுபிடிகளால் தற்போது டிசம்பர் மாதமாக இருந்தாலும் கூட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை என்பது குறைந்துள்ளது.
இதுபற்றி கோவா சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிலேஷ் ஷா கூறுகையில், ‛‛கொரோனாவுக்கு முன்பு அதாவது 2019ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 9.4 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு ஜூலை வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.8 லட்சத்தை எட்டியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இரவு 10 மணிக்கு பிறகு பார்ட்டிகள் அனுமதிக்கப்படுவது இல்லை’’ என்றார்.












Click it and Unblock the Notifications