அடுத்த 2 மணி நேரம்! காஞ்சிபுரம், தென்காசி உள்பட 3 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் நாளையில் இருந்து அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டப்போவதாக வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கையாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஃபெஞ்சல் புயலுக்கு பின் இரண்டு நாட்கள் வெளுத்து எடுத்த மழையால், சென்னை மற்றும் தமிழகத்தில் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 50 செமீ மழை பெய்தது. இதனால் அந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

அடுத்தடுத்த 2 நாட்களும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பெரிதாக மழை பெய்யவில்லை. ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் நாளை 10 ஆம் தேதியில் இருந்து அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்தெடுக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியிருந்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகர்வதன் காரணமாக நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதற்கு தற்போதே ஆட்டத்தை தொடங்கும் வகையில் அடுத்த 2 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில், ”தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் இன்று இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், தென்காசி மற்றும் குமரி ஆகிய 3 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது”. என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-
நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 11 ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை 10 ஆம் தேதி, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 11 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 12 ஆம் தேதி தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 13 ஆம் தேதி தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14 ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 15 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications