சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
சென்னை: வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் புயல் உருவாவது இயல்பான செயலாக மாறி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு தொடங்கி, இப்போது வரை ஆண்டின் இறுதியில் பெய்யும் கனமழை காரணமாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் சென்னையின் புறநகர் பகுதியை லேசாக பாதித்திருந்தது. ஆனால் பெரிய அளவில் எந்த இழப்புகளும் ஏற்படவில்லை. மறுபுறம் டெல்டா மாவட்டங்களில் மழை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இன்றும் டெல்டா மாவட்டங்கள் இந்த பிரச்னையிலிருந்து இயல்பு நிலைக்கு முழுவதுமாக திரும்பவில்லை. இது ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு வாரத்திற்கு முன்னர் உருவாகியிருந்தது. இது வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. மட்டுமல்லாது இன்று இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது.
இதனால் சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாது சென்னை,கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மழையை பொறுத்தவரை, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் கடந்த அக்.1ம் தேதி தொடங்கி இன்று வரை சராசரியாக 56.8 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 42.4 செ.மீதான். தற்போது பெய்திருக்கும் மழை இயல்பை விட 34% அதிகமாகும். தனித்தனியாக மாவட்ட வாரியாக பார்த்தால் திருப்பத்தூரில் அதிக மழை பெய்திருக்கிறது. அதாவது 25.9 செ.மீ அளவில் பெய்ய வேண்டிய மழை, 48.5 செ.மீ என்கிற அளவில் பெய்திருக்கிறது. இது இயல்பை விட 87% அதிகமாகும்.
திருப்பத்தூர் தவிர, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் முறையே 60%, 81%, 59%, 63%, 69% என அதிக அளவில் மழை பெய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications