நீலகிரியில் 24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான 278 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இதற்கு எல் நினோதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். வெயிலின் தாக்கம் மக்களை மட்டுமல்லாது வன விலங்குகளையும் கடுமையாக பாதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்பட்டது.

அதற்கேற்றார்போல இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டது. வழக்கமாக வேலூர் தொடங்கி ஈரோடு வரை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை கோவை, நீலகிரி என வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. ஊட்டியில் இதுவரை பதிவாகத அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. எனவே நீர் நிலைகள் முற்றிலும் காய்ந்து போயின. எதிர்பார்த்த அளவுக்கு குளுமை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்தன. அதேபோல உள்ளூர் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, நீலகிரியில் இந்த நிலைமை எனில், மற்ற மாவட்டங்களில் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. ஆனால் இந்த வெயில்தான் வெப்பச்சலனத்தை ஏற்படுத்தி தற்போது நல்ல மழையை கொண்டு வந்தது.
வழக்கமாக ஜூன் மாதம் 1ம் தேதியன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்த முறை மே மாதம் 30ம் தேதியே மழை தொடங்கிவிட்டது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியின் பந்தலூர் பகுதியில் 278 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது குறித்து ஏற்கெனவே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்றிரவு எச்சரித்திருந்தார்.
"பந்தலூர் - தேவாலாவில் இன்னும் மேகங்கள் (இரவு 9 மணி நிலவரப்படியே) காணப்படுகின்றன. தமிழகத்தில் இந்த இடம் மற்றும் மாஞ்சோலையை தவிர வேறு எங்கும் மழை இல்லை. பந்தலூரில் பெய்துவரும் மழை மிகவும் வித்தியாசமானது. பல மணிநேரமாக பெய்து வருகிறது. கேரளாவில் கூட இந்த அளவிற்கு மழை பெய்யவில்லை. 200 முதல் 300 மில்லி மீட்டர் மழை பெய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
பந்தலூரில் இதுக்கு எண்டே இல்லை போல, புதிதாக மேகக்கூட்டங்கள் நகர்ந்து செல்கின்றன. நீலகிரி மாவட்டம் முழுவதுமே மழை பெய்து வரும் காரணத்தால், மக்கள் சாலைகளில் இரவில் செல்வது ஆபத்தானது என்கிறார்கள் மக்கள். குறிப்பாக பந்தலூர் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்கிறார்கள்" என நேற்றிரவு x தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதேபோல இன்று காலை, "பந்தலூரில் மழை மேகங்கள் அப்படியே ஸ்டக்காகி நின்றுள்ளன" என அதிகாலை 4 மணிக்கு பதிவிட்டிருந்தார். அதேபோல காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 278 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது என்றும் தற்போது கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications