பின்னி பெடலெடுக்கப்போகும் மழை.. தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. எனினும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.

மிக கனமழைக்கான அலர்ட்: இந்த நிலையில், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை: நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் எப்படி?: நாளை மறுதினம் அதாவது வரும் செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: கடலோர பகுதிகளை பொறுத்தவரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு வருகிற 21-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.இதனை பின்பற்றி 18 மாவட்ட ஆட்சியர்களுக்க்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications