சென்னை, திருவள்ளூர் மக்களே! இன்று காலை வரை அலர்ட்டா இருங்க.. மிக கனமழைக்கு சான்ஸ்.. வானிலை மையம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டு வழக்கத்தை விட சற்று தாமதாகவே தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் முடிவு பெறும் பருவமழை நடப்பு ஆண்டு ஜனவரியிலும் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படியே சென்னையில் இன்று மாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், சில இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர்ந்து சீரான அளவில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று 08.01.2024 காலை 8.30 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை எண்ணூரில் 11 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications