நீலகிரியில் அதி கனமழை.. உடுமலை பஞ்சலிங்க அருவிகளில் பெருக்கெடுத்த வெள்ளம்.. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் விடாமல் கொட்டிய கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பஞ்ச லிங்க அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி காளியாபுரத்தில் 20 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் விடாமல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கோவை மாவட்டம் அவினாசியில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையாக 23 செமீ பதிவாகியுள்ளது. விடாமல் பெய்த மழையால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளதால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் மழை பொய்யாவிட்டஅணைப் பகுதிகளான பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதேபோல் நம்பியூர், கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை பவானி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூரில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நம்பியூர், குருமந்தூர், இருகாலூர், எலத்தூர் போன்ற பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விடிய விடிய பெய்த கனமழையால், கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி காளியாபுரத்தில் 20 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications