‛ரெட் தக்காளி’.. சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பு! ஜுனில் இப்படி நடந்ததே இல்லை - வெதர்மேன் வார்னிங்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்வதற்கான‛ரெட் தக்காளி' நிகழ்வு நடைபெறுகிறது. சென்னையை பொறுத்தமட்டில் ஜுன் மாதம் இப்படி நடந்ததே இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் இன்று கணித்திருந்தது.

அதன்படி சென்னையில் இன்று இரவு பல இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தற்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதன்படி சென்னை கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், மாதம்பாக்கம், ராயபுரம், முகப்பேர், அண்ணாநகர், அரும்பாக்கம், கோயம்பேடு, எண்ணூர், தண்டையார்பேட்டை, வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்ல், தியாகராயநகர், வள்ளுவர் கோட்டம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. இதனால் பல இடங்களில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

இந்நிலையில் தான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: ‛‛காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ரெட் தக்காளி நிகழ்வு (அதிக மழைக்கான விகிதம்) நடக்கிறது. இங்கே மழை வீதம் (150-200 மிமீ/மணி) இருக்கலாம். விரைவில் இந்த மழை தென்சென்னையை அடைய வேண்டும். அதோடு குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ய உள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் ஜுன் மாதத்தில் இப்படி நடந்ததே இல்லை. ஏனென்றால் இந்த மாதத்தில் 18 நாட்களில் 10 நாட்கள் மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இதற்கு முன்பு பொதுவாக 3 முதல் 4 நாட்கள் மட்டுமே மழை பெய்தது'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications