Chennai Rains: வங்கக் கடலில் 25, 26ல் உருவாகும் சக்கரம்! புயலாக மாற வாய்ப்பு! வெதர்மேன் தகவல்
சென்னை: வங்கக் கடலில் அடுத்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 25, 26ஆம் தேதிகளில் உருவாகும். இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறாது. அதே வேளை நல்ல மழையை தமிழகத்தில் பரவலாக கொடுக்கும்.

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என கணிப்பது சிரமம். ஆனால் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும் என்றே இந்த பேட்டர்ன் கூறுகிறது. டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், அரியலூர், விழுப்பும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அடுத்த காற்றழுத்தம் அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் உருவாக வாய்ப்புள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, தங்கச்சிமடத்தில் 170 மி.மீ., மண்டபம் பகுதியில் 143 மி.மீ. மழையும் ஈரோட்டில் வரட்டுபள்ளத்தில் 128 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என சொல்லப்பட்டுள்ளது. இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை பெய்யும்.
இதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை (அக்.22) விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்திற்கானது. எனவே தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தொடர்ந்து மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த வழியாக கரையை கடக்கும் என்ற தகவலை தற்போதைக்கு வானிலை மையம் தெரிவிக்கவில்லை.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தீவிர மழை மேகங்கள் தென்படுகின்றன. இன்றைய தினம் தமிழகத்தில் மேகமூட்டமாக இருப்பதால் பிற்பகலுக்கு மேல் மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள சலனம் புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications