என்கிட்ட மோதாதே..! எல்லா கட்சி வேட்பாளர்களுக்கும் வந்த தலைவலி..! இதுக்கு எண்டே இல்லையாம் சாரே..!
சென்னை: அனல் பறக்கும் பிரசாரம், சூடுபிடித்த தேர்தல் களம் என தேர்தல் காலங்களில் அனைத்து இடங்களிலும் சொல்வது வழக்கம் தான். அப்படி மக்களவைத் தேர்தல் களமும் அரசியல் கட்சித் தலைவர்களின் சூடான விவாதத்தாலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தாலும் பயங்கர சூடாகவே இருக்கிறது. இருந்த போதும் அரசியல் கட்சியினரை சுணக்கமடைய வைத்திருக்கிறது ஒரு பிரச்சினை..
சட்டமன்றத் தேர்தல் ஆனாலும் சரி நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் சரி வழக்கமாக மே மாதத்தில் தான் நடத்தப்படுவது வழக்கம். கடந்த பல தேர்தல்களிலும் அதுவே நடைமுறையாக இருந்திருக்கிறது. தற்போதும் அந்த நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக மற்ற நாட்களில் அமைச்சர்கள் தொடங்கி உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வரை காலை 10 மணிக்கு மேல் தான் வெளியே தலை காட்டுவார்கள். அதற்குப் பிறகு பம்பரமாய் சுழன்று தங்களது வேலைகளை முடித்துவிட்டு இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது வழக்கம்.
கடும் வெயில்: ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக இருக்கிறது. வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியில் தலை காட்டவே தயங்குகின்றனர். எதுவாக இருந்தாலும் காலை எட்டு மணிக்குள் முடித்துவிட்டு அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதேபோல் மாலை 6:00 மணிக்கு மேல் தான் அட்டனன்ஸ் போடவே முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே சொன்னது போல ஏப்ரல் மே மாதங்களில் தான் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் கூட அவ்வப்போது கோடை மழை பெய்து வானிலையை சற்று இதமாக்கி வைத்திருக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஏழு மணிக்கு வெளுத்து வாங்க தொடங்கும் வெயில் ஆறு மணி ஆனாலும் செல்ல மாட்டேன் என அடம் பிடிக்கிறது..
வெப்பத்தால் தகிக்கும் தமிழ்நாடு: தமிழ்நாட்டை கொண்டு போய் சூரியனுக்கு பக்கத்தில் வைத்தது யார் என கேட்கும் அளவுக்கு கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது வேட்பாளர்களும் கூட வெயில் நேரத்தில் வெளியே தலை காட்ட தயங்குகின்றனர். நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் மண்டையை பிளந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, கோவை, சென்னை, மதுரை ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை கொளுத்தும் கோடை வெயிலால் பிரச்சாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அரசியல் கட்சியினர்.
பிரசார நேரம்: தமிழ்நாட்டில் கொளுத்தி வரும் வெயில் காரணமாக அனைத்து அரசியல் கட்சியினருமே தங்களது பிரச்சார நேரத்தை மாற்றி அமைத்து வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தல் களம் என்று மட்டுமல்ல வானிலை களமும் சூடு பிடித்திருப்பது தான் காரணம். கோடை வெயில் ஆக்ரோஷமாக தனது பணியை தொடங்கி உள்ள நிலையில் ஆக்ரோஷமாக வேலை பார்க்க வேண்டிய அரசியல் கட்சியினர் சற்று அதனை ஒத்தி வைத்துள்ளனர். வழக்கமாக அரசியல் நிகழ்ச்சிகள் 10 மணிக்கு மேல் தான் தொடங்கும் என்றாலும் தற்போது கொளுத்தும் வெயில் காரணமாக ஒன்பது மணிக்குள்ளாகவே முக்கிய பிரச்சாரங்களை முடித்து விடுகின்றனர்.
ஐடியாக்களிலும் மாற்றம்: உதாரணத்திற்கு அதிகாலையில் வாக்கிங் செல்லும்போது வாக்கு சேகரிப்பது, டீக்கடையில் டீ போட்டுக் கொடுப்பது, மார்க்கெட்டில் காய்கறி விற்பது என ஆறு மணி முதல் 9 மணி வரை முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை 4 மணிக்கு மேல் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்வது நடைப்பயிற்சி செய்பவர்களிடம் வாக்கு சேகரிப்பது என தேர்தல் பிரச்சார திட்டங்களையே மாற்றி விட்டனர். இடைப்பட்ட நேரத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருக்கும் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
காரணம்: சரி, கிடைக்கும் நேரத்தை என்ன செய்வது என யோசித்த அரசியல் கட்சியினர் தங்கள் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகங்களில் கூட்டங்கள் நடத்துவது, நிர்வாகிகளை சந்திப்பது கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என பிளானை மாற்றி விட்டனர். தேசிய கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை மட்டும் அல்லாது சுயேச்சை வேட்பாளர்கள் கூட வெயில் நேரத்தில் வெளியே தலையைக் காட்ட தயங்குகின்றனர்.
புலம்பும் அரசியல் கட்சியினர்: பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் கூட இதே பாணியைத் தான் பின்பற்றுகின்றனர். முக்கிய தலைவர்கள் ஒருவேளை பிரச்சாரத்திற்கு வந்தால் கூட திறந்த வேனுக்கு மேலே பந்தலமைத்தோ அல்லது வெயில் படாத இடத்திலோ நின்று தான் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஒரு பக்கம் அதிகாரிகள் பிரச்சினை, கட்சிக்குள் பிரச்சினை, எதிர்கட்சியினர் பிரச்சினை என பல பிரச்சினைகளை சமாளித்து வரும் அரசியல் கட்சியினர் இப்போது வெயில் பிரச்சனையும் சமாளிக்க வேண்டியதாயிற்று என புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications