சென்னை மண்ணில் ஈரம்.. 28 வருஷத்துக்கு பிறகு நடந்த அதிசயம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை பொறுத்த அளவில், கடந்த 28 ஆண்டுகளில் இந்த ஆண்டின் ஜூன் மாதம்தான் ஓரளவு வெயில் குறைந்த மாதமாக இருப்பதாக வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இதற்கு எல் நினோதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். வெயிலின் தாக்கம் மக்களை மட்டுமல்லாது வன விலங்குகளையும் கடுமையாக பாதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்பட்டது.

அதற்கேற்றார்போல இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டது. வழக்கமாக வேலூர் தொடங்கி ஈரோடு வரை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை கோவை, நீலகிரி என வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. ஊட்டியில் இதுவரை பதிவாகாத அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. எனவே நீர் நிலைகள் முற்றிலும் காய்ந்து போயின. எதிர்பார்த்த அளவுக்கு குளுமை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்தன. அதேபோல உள்ளூர் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, நீலகிரியில் இந்த நிலைமை எனில், மற்ற மாவட்டங்களில் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. ஆனால் இந்த வெயில்தான் வெப்பச்சலனத்தை ஏற்படுத்தி நல்ல மழையை கொண்டு வந்தது.
சென்னையை பொறுத்த வரை மே மாதத்தத்தில் ஒரு சில நாட்களில் மழை பெய்தது. ஆனால் ஜூன் மாத தொடக்கத்தில் வெயில் மீண்டும் பழைய நிலையை எட்டியது. இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. நேற்று இரவும் மழை வெளுத்திருக்கிறது. இந்நிலையில் 1996ல் தொடங்கி கடந்த 28 ஆண்டுகளில் இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில்தான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகள் இந்த அளவு மழையையும், ஈரப்பதத்தையும் பெற்றிருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
அதேபோல, இன்று மாலை அல்லது இரவில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி மழை மேகங்கள் திரளும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும், சில இடங்கள் மழையை தவறவிடலாம் எனவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
அதேபோல அண்டை மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மேலும், "ஜூன் 22/23 முதல் ஜூன் 28/29 வரை மூணாறு, இடுக்கி, வயநாடு, குடகு, சிக்மகளூர், ஷிமோகா, நீலகிரியின் கூடலூர்-பந்தலூர் மலைப்பகுதிகள், வால்பாறை, கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். பருவமழையின் முதல் பருவத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு நல்ல வரத்து கிடைக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications