சென்னைக்கு இந்த ஆண்டின் கடைசி மழை இதுதானா? வெதர்மேன் சொல்வது என்ன?
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 11 மணி முதல் லேசான தூறல் மழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னையில் எப்போது முடியும் என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவரது தகவலின்படி, வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்றும் நாளையும் (டிசம்பர் 18 மற்றும் 19) நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

சென்னையின் கடற்கரையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் அடுத்த சில மணி நேரங்களில், குறிப்பாக வட சென்னையில் மழை தொடங்கி பின்னர் நகரின் பிற பகுதிகளுக்கும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு மிகக் குளிர்ந்த இரவை வழங்கியுள்ளது. தற்போது மேகக் கூட்டங்களின் ஈரப்பதம் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு கடைசி மழையா?
பலரும் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இது சென்னைக்கு கடைசி மழை இல்லை என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு, டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், இன்றும் நாளையும் சென்னையில் நல்ல மழை பெய்யும் என்றும், இந்த மழை நீர் குடிநீர் ஆதாரங்களுக்கு அதிக நீர்வரத்தை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்த பருவமழைக் காலத்தை மக்கள் நன்கு அனுபவிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலுவலகம் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் மழைக்காக காத்திருக்காமல் தங்கள் பணிகளைத் தொடரலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications