கர்நாடகா, கேரளாவில் பழுத்த ‘ஆரஞ்ச்’.. கோவாவுக்கு அலர்ட்? தமிழ்நாட்டுக்கு என்ன சேதி.. ஐஎம்டி கணிப்பு
டெல்லி: ஆந்திரா மற்றும் கேரளாவில் ஜூன் 28 ஆம் தேதி வரையும், குஜராத், கோவா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் ஜூன் 30 வரையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் டெல்லியிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.
மார்ச் முதல் மே மாதம் வரை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது. வெப்ப அலை காரணமாக அதிக வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

அதிகாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கும் மக்கள் கூட அதீத வெப்பத்தை உணர்ந்தனர். காலை 7 மணிக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது இதனால் பெண்கள் முதியவர்கள் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர்.
தமிழகத்தில் வெப்ப அலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வீசியது. வெப்ப நிலை குறைவாக இருந்தாலும் வெப்ப அலை காரணமாக தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் கூடுதல் வெப்பநிலை ஏற்பட்டதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் கோடை மழை காரணமாகவும், அதற்கு பிறகான தென் மேற்கு பருவ மழை காரணமாக வட மாநிலங்களிலும், தமிழகம் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு இரண்டு நாட்கள் முன்னதாகவே தொடங்கியது. இதை அடுத்து கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கும் நல்ல மழை பெய்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் அரபிக் கடலை ஒட்டி இருக்கும் மகாராஷ்டிரா கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோட்டையம், ஆலப்புழா, சொக்கனூர், அம்பலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வயநாடு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரணம் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மழை காரணமாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தேர்தவுகள் வழக்கம் போல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா, கேரளா, கோவா உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் கடலோர மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களுக்கு அடுத்த ஏழு நாட்களுக்கு மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதே போல ஆந்திரா, கேரளா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஜூன் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஜூன் 30-ஆம் தேதியை தவிர்த்து அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யிம் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் இடி மின்னலுடன் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வலு குறைய இருப்பதால் சென்னைக்கு மழை வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications