டக்கென ரூட்டை மாற்றிய காற்றழுத்த தாழ்வு! இரண்டு நாட்களுக்கு செம மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோர பகுதிகளை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது என்றும், இதனால் 25 ஆம் தேதி இரவு மற்றும் 26 ஆம் தேதி காலை மழை பெய்ய தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அந்த இரண்டு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 31 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சி, சேலம், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மற்ற இடங்களில் காலை நேரங்களில் பனி மூட்டமும், மதிய நேரங்களில் வெயிலும் அடித்து வருகிறது.

எனினும் தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு சான்ஸ் இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. இதேபோல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்ததாகவும் கூறியிருந்தது.
ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்தை நோக்கி நகருகிறது. நாளை 24 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை அருகே வர வாய்ப்பு உள்ளது. இதனால் வட தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோர பகுதிகளை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது என்றும், இதனால் 25 ஆம் தேதி இரவு மற்றும் 26 ஆம் தேதி காலை மழை பெய்ய தொடங்கும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு தமிழக கடலோர பகுதிகளை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது. 25 ஆம் ம் தேதி இரவு / 26 ஆம் தேதி காலை மழை பெய்ய தொடங்கும். இரண்டு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் மழை பெய்யும். இந்த மழை துன்புறுத்தும் அளவுக்கு இருக்காது. ரசிக்க கூடிய ஒன்றாக இருக்கும்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், " 21 ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாலை 5.30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, 22 ஆம் தேதி காலை 08. 30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24 ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
இதனால் வரும் 24 ஆம் தேதி வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications