ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தலாம்
சென்னை: ஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதியை தமிழக மின்துறை அறிமுகப்படு்த்தியுள்ளது.
இது குறித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,
தமிழ்நாட்டில் 1 கோடியே 89 லட்சம் மின் பயனீட்டாளர்கள் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள வசூல் மையங்களில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
மக்கள் வீட்டில் இருந்தபடியே, மின்சார வாரியத்தின் இணையதளமான www.tneb.in மூலம் மின்சார கட்டணம் செலுத்தும் புதிய வசதியை இப்போது அறிமுகப்படுத்துகிறோம்.
இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளுடன் இணைந்து இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எந்த நேரமும், எந்த நாளிலும் பணம் செலுத்தலாம். நேரம் மிச்சமாகும். ஆன்-லைனில் மின் கட்டணம் செலுத்துவதால் மின்வாரிய அலுவலகங்களில் இயங்கும் வசூல் மையங்கள் மூடப்பட மாட்டாது. அவை தொடர்ந்து செயல்படும்.
ஏற்கனவே எந்த நேரத்திலும் பணம் செலுத்தும் வசதி (ஏ.டி.பி.) கடந்த ஆண்டு கனரா வங்கி உதவியுடன் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதே போல ஆக்ஸிஸ் (முன்னாள் யுடிஐ வங்கி) வங்கியின் கிரெடிட் கார்டு, மற்றும் டெபிட் கார்டு கொண்டும், இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் நெட்-பேங்கிங்' முறையிலும் மின் கட்டணம் செலுத்தும் வசதி கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இப்போது இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வடக்கே கும்மிடிப்பூண்டி முதல் தெற்கே மரக்காணம் வரை உள்ள 28 லட்சம் மின் நுகர்வோர்கள் இந்த வசதியால் முதல் கட்டமாக பயனடைவார்கள்.
இவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் தங்களது மின் கட்டணத்தை செலுத்த முடியும். வீட்டில் கம்ப்யூட்டருடன் பிரிண்டர் இருந்தால் ஆன்-லைன் மூலம் பணம் செலுத்தியதும் உடனே ரசீதும் எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இதுபோன்ற வசதியை செய்து கொடுக்க மற்ற வங்கிகள் முன்வந்தாலும் அவற்றை தமிழ்நாடு மின்சார வாரியம் ஊக்குவிக்கும்.
தமிழகத்திற்கு 8,800 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. 7,800 மெகாவாட் மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படுகிறது.
சென்னையில் 24 மணி நேரமும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இரவு முழுவதும் மின்வெட்டு கிடையாது. தேவைப்பட்டால் கிராமங்களில் மட்டும் 2 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 11 லட்சம் மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காக மாலை 6 மணி முதல் 11 மணி வரை தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது என்றார் ஆற்காடு வீராசாமி.












Click it and Unblock the Notifications