வங்கிகளில் பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய காலக்கெடு முடிந்தது
டெல்லி: செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, 1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் வங்கிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து தங்களிடம் உள்ள பணத்தை பொது மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து வந்தனர். பல்வேறு இன்னல்களுக்கு இடையே பணத்தை டெபாசிட் செய்வதற்கும், பணத்தை எடுப்பதற்கும் வங்கிகளுக்கு தொடர்ந்து செல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். ஏடிஎம்களிலும் போதுமான பணம் நிரப்படாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது ஒரு புறம் இருக்க கடந்த 50 நாட்களாக மாநிலம் முழுவதும் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஏடிஎம்கள் இன்னும் செயல்படாத நிலையில் தான் நீடித்து வருகிறது. அந்த ஏடிஎம்களில் இன்னும் ஏன் பணம் நிரப்பப்படவில்லை என்பது புரியவில்லை.
இதற்கிடையில் மோடி கூறியபடி, வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் மக்கள் தங்கள் கையில் உள்ள பணத்தை டெபாசிட் செய்ய வங்கிகளை நோக்கி படையெடுத்தனர்.
அது மட்டுமல்லாமல் மாத இறுதி மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்கள் அடுத்தடுத்து வருவதால் இதனை சமாளிக்கவும் வங்கிகளில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. வங்கிகள் திறப்பதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், வங்கிகளில் அசம்பாவிதம் சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தாலும், ரிசர்வ் வங்கியில் மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பழைய ரூபாய் நோட்டுகளை இவ்வளவு நாட்கள் ஏன் வைத்திருந்தீர்கள் என்பதற்கான உரிய காரணத்தை கூறி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications