பெங்களூர்ல உள்ள ஃபேமஸ் பஸ் நிலையத்திற்கு ‘மெஜஸ்டிக்'னு எப்படி பெயர் வந்தது தெரியுமா?

  • பெங்களூர்: பெங்களூரின் மத்திய பகுதியில் நகரின் முக்கிய அடையாளமாக 'மெஜஸ்டிக்' பஸ் நிலையம் அமைந்துள்ளது. பெங்களூர் நகரை கட்டமைத்த கெம்பேகவுடாவின் நினைவாக 'கெம்பேகவுடா பஸ் நிலையம்' என்று பெயர் மாற்றம் செய்தாலும் கூட இன்று வரை 'மெஜஸ்டிக் பஸ் நிலையம்' என்றே பெரும்பாலான மக்கள் கூறி வருகின்றனர். இப்படியான இந்த பஸ் நிலையத்திற்கு 'மெஜஸ்டிக்' என்று பெயர் வந்ததன் பின்னணி பற்றிய சுவாரசிய தகவலை இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களின் பெயர்கள் காலப்போக்கில் மாறி வந்தாலும் கூட பொதுமக்களில் ஒரு தரப்பினர் இன்னும் கூட பழைய பெயர்களை வைத்தே அழைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். உதாரணமாக சென்னையை, மெட்ராஸ் என்றும், மும்பையை, பாம்பே என்றும் தற்போதும் அழைக்கும் வழக்கம் உள்ளது. இதில் தவறு எதுவும் இல்லை.

    Advertisement

    அதேபோல் தான் பெங்களூர் நகரில் முக்கிய அடையாளமாக இருக்கிறது கெம்பேகவுடா பஸ் நிலையம். இங்கிருந்து தான் பெங்களூர் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கர்நாடகாவின் பிற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ் நிலையத்துக்கு பெங்களூரை நகரின் கட்டமைப்புக்கு வழிவகுத்து கொடுத்த கெம்பேகவுடாவின் நினைவாக கெம்பேகவுடா பஸ் நிலையம் என்று பெயர் வைத்தாலும் கூட மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்பது 'மெஜஸ்டிக்' என்ற பெயர் தான். ஆம். பெங்களூரில் கெம்பேகவுடா பஸ் நிலையம் என்றாலும் மெஜஸ்டிக் பஸ் நிலையம் என்றாலும் ஒன்று தான்.

    Advertisement

    இன்னும் சொல்லப்போனால் பெங்களூரில் காலம் காலமாக வசித்து வருபவர்கள், நன்கு பழக்கப்பட்டவர்களிடம் கூட கெம்பேகவுடா பஸ் நிலையம் எங்கு உள்ளது? எப்படி செல்ல வேண்டும்? என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்பார்கள். ஏனென்றால் அந்த பெயர் பரீட்சயமாக இருந்தாலும் கூட அனைவருக்கும் சட்டென நினைவில் இல்லாமல் உள்ளது. அதேவேளையில் மெஜஸ்டிக் பஸ் நிலையம் எப்படி போக வேண்டும்? எங்கு உள்ளது? என்று கேட்டால் அனைவரும் எளிதாக சொல்லிவிடுவார்கள்.

    இப்படி பெங்களூரில் அனைவராலும் உச்சரிக்கப்படும் 'மெஜஸ்டிக்' பஸ் நிலையத்துக்கு எப்படி அந்த பெயர் வந்தது? என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும். இந்த பெயருக்கு முக்கிய காரணம் சினிமா தியேட்டர் தான். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தற்போதைய மெஜஸ்டிக் பஸ் நிலையம் இருக்கும் இடம் என்பது ஏரியாக இருந்தது. அந்த ஏரியின் பெயர் தர்மம்புதி ஏரி (Dharmambudhi Lake). இந்த ஏரி தான் பெங்களூர் நகரில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது.

    Advertisement

    கடும் வறட்சியால் இந்த ஏரி வறண்டது. இதனால் பரந்து விரிந்து தண்ணீரின்றி கிடந்த ஏரிக்குள் சர்க்கஸ், கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஏரிக்கள் ஆக்கரமிப்புக்கு உள்ளாகின. தியேட்டர்கள் கட்டப்பட்டன. இதனால் பெங்களூர் காந்தி நகர், சுபாஷ் நகர், கேஜி ரோடு உள்ளிட்டவை தான் பெங்களூரில் என்டர்டெயின்மெண்ட்டுக்கு பெயர் பெற்ற இடங்களாக இருந்தன. இங்கு ஏராளமாக தியேட்டர்கள் இருந்தன. இந்தியாவில் அதிகளவில் 'சிங்கிள் ஸ்கீரின்' தியேட்டர்கள் இருந்த இடம் என்றால் அது இந்த ஏரியா தான்.

    இங்கிருந்த ஒரு தியேட்டரின் பெயர் தான் மெஜஸ்டிக். இந்த தியேட்டர் முன்பு பஸ்கள் நின்று செல்லும். இதனால் தான் அங்குள்ள பஸ் நிலையத்திற்கு மெஜஸ்டிக் என்ற பெயர் வந்தது. இந்த தியேட்டர் 1920ம் ஆண்டு காலக்கட்டத்தில் முதலில் தெலுங்கு திரைப்படங்கள் அதிகமாக திரையிடப்பட்டது. அதன்பிறகு கன்னடம், தமிழ் திரைப்படங்களும் திரையிடப்பட்டன. அதன்பிறகு கடந்த 2010ம் ஆண்டில் இந்த தியேட்டர் இடிக்கப்பட்டது. நடிகர் புனித் ராஜ்குமாரின் 'மிலானா' திரைப்படம் தான் இந்த தியேட்டரின் கடைசி படமாகும்.

    Advertisement

    இந்த பெங்களூரின் அடையாளமாக உள்ள மெஜஸ்டிக் பஸ் நிலையத்தின் பெயருக்கு காரணமான தியேட்டர் இருந்த இடம் தற்போது சட்டச்சிக்கலில் உள்ளது. புல் மண்டிப்போய் உள்ளது. பொதுமக்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறிப்போய் உள்ளது. இருப்பினும் மெஜஸ்டிக் என்ற பெயர் நிலைத்து நிற்கிறது. இது தான் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கான பெயர் காரணமாகும்.

    தற்போது மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருக்கும் கட்டமைப்புகள் 1980ம் ஆண்டில் கட்டப்பட்டவையாகும். இங்கு தினமும் 5 ஆயிரம் பஸ்கள் வந்து செல்லும் நிலையில் காலத்தால் அழித்த 'மெஜஸ்டிக் ' தியேட்டர் தற்போது பஸ் நிலையமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தின் பெயரை பெங்களூர் நகரை கட்டமைத்த கெம்பேகவுடாவின் நினைவாக கெம்பேகவுடா பஸ் நிலையம் என்று மாற்றினாலும் கூட காலத்தால் அழியாமல் கம்பீரமாக மெஜஸ்டிக் என்ற பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The ‘Majestic’ bus station is a prominent landmark located in the heart of Bengaluru. Although it was renamed the ‘Kempegowda Bus Station’ in honor of Kempegowda—the founder of the city—most people still refer to it as the ‘Majestic’ bus station to this day. Here, we explore the interesting story behind the theater that gave this bus station its ‘Majestic’ name.