மொத்த கேரளாவையும் உலுக்கிய.. ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்.. கொச்சி சிறுவனுக்கு நடந்தது என்ன? கொடூரம்
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் மெசேஜ் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, 17 வயது சிறுவன் ஒருவன் சக நண்பர்கள் மற்றும் ஒரு பெண்ணால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 40 வயது பெண் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட 4 சிறுவர்களை இளமக்கரா போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பிரச்சனை தொடங்கியது எப்படி?
பாதிக்கப்பட்ட 17 வயது பிளஸ்-டூ மாணவனும், அவனது நண்பர்களும் ஆன்லைன் கேமிங் விளையாடுவதற்காகப் பொதுவான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுவனின் செல்போன் பழுதாகிவிட்டதால், அவனால் அந்த சமூக வலைதளக் கணக்கைப் பயன்படுத்த முடியவில்லை.
சமீபத்தில் போன் சரியான பிறகு, தனது இன்ஸ்டாகிராம் கணக்கை மீண்டும் திறந்து பார்த்தபோது சிறுவனுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவனது நண்பர்கள் சிலர் அதே கணக்கைப் பயன்படுத்தி பெண்களுக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியது தெரியவந்தது. இதுகுறித்து தனது நண்பர்களிடம் அந்த சிறுவன் நியாயம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.
சமாதானம் பேசுவதாக அழைத்துச் சென்று தாக்குதல்
இந்த விவகாரத்தால் நண்பர்களுக்கு இடையே கடும் தகராறு வெடித்தது. இதனைத் தொடர்ந்து, பிரச்சனையைப் பேசித் தீர்த்து சமாதானம் செய்து கொள்ளலாம் எனக் கூறி, எடப்பள்ளியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அச்சிறுவனை நண்பர்கள் வரவழைத்துள்ளனர். அங்கு சென்ற சிறுவனை, அவனது நண்பர்களில் ஒருவனின் தாயாரான 40 வயது பெண் மற்றும் சிறுவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று சுற்றி வளைத்தது.
வீட்டிற்குள் அடைத்து வைத்து, அச்சிறுவனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவன் அணிந்திருந்த பள்ளிச் சீருடையைக் கிழித்து, உடலில் கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், அந்த 40 வயது பெண்ணின் முன்னிலையிலேயே இத்தாக்குதல் அரங்கேறியதோடு, அதை வீடியோவாகவும் பதிவு செய்து வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர்.
தாயின் புகாரும் போலீஸ் நடவடிக்கையும்
தாக்குதலுக்கு ஆளான சிறுவன் ஆரம்பத்தில் பயம் காரணமாக தனது வீட்டில் எதையும் கூறவில்லை. ஆனால், வலியால் தூங்க முடியாமல் அவதிப்பட்ட அவனது உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்த தாய் அதிர்ச்சியடைந்தார். மகன் நடந்ததை விவரித்ததும், உடனடியாக அவனை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
பின்னர் சிறுவனின் தாய் இளமக்கரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த 40 வயது பெண்ணைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர். அவர் மீது கொலை முயற்சி, அத்துமீறி அடைத்து வைத்தல், மிரட்டல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறுவர் நீதி வாரியம் விசாரணை
இந்த தாக்குதலில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேரை பெற்றோருடன் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் பிடித்தனர். மற்றொரு சிறுவன் வெளியூரில் இருப்பதால் அவனையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்ட 4 சிறுவர்களும் சிறுவர் நீதி வாரியத்தில் (JJB) ஆஜர்படுத்தப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று வாரியம் பெற்றோர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பிடிபட்ட சிறுவர்களில் 3 பேர் மீது ஏற்கனவே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் திருட்டு முயற்சி தொடர்பான குற்றப் புகார்கள் இருந்து எச்சரிக்கப்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளப் பகையால் சிறுவர்களே இத்தகைய கொடூர வன்முறையில் ஈடுபட்டதும், அதற்கு ஒரு தாயே துணையாக நின்றதும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
