"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலையிடவேண்டும்”.. ஜவாஹிருல்லா கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: "திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும்." என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் மலை என்பது நீண்டகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளைப் பேணி வரும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.

Jawahirullah

இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் இரு தரப்பினரின் மத உரிமைகளையும், நீண்டகால வழிபாட்டு மரபுகளையும், அப்பகுதியில் நிலவி வரும் அமைதியையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டியது அவசியமாகும்.

ஆனால், இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நில அளவைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதுடன், திருக்கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தும், மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் சட்டபூர்வமான நிர்வாகப் பொறுப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆழமான தாக்குதலாகும்.

நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசின் அதிகார வரம்பு, மத உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் உரிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக மத்தியப் படைகளை ஈடுபடுத்துவதும், கோயில் நிர்வாகத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதும் எதிர்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்த நிர்வாகப் பிரச்சினைகளில் மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும்.

இந்த விவகாரத்தைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமையல்ல. அது அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும்.
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளை உச்சநீதிமன்றம் சிதைத்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு அனைத்து தரப்பினரின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாத்து, தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மத வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாற்றப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவே தொடர்ந்து திகழ வேண்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+