டிஆர்பிக்காக நிகழ்ச்சியின் தரத்தை குறைப்பதா? சேரன், திவாகர் மோதலில் பாலாஜி பிரபு விட்ட சவுக்கடி
சென்னை: நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைச் சுருட்டிக்கொண்டு ரோட்டுக்குத்தான் போகும் என்பார்கள். அப்படித்தான் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் செயல்பாடுகளும் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இப்போது இயக்குநர் சேரனுடனும் மோதலில் இறங்கியிருக்கிறார். ஜெயா டிவி நிகழ்ச்சியில் நடந்தது என்ன? நிகழ்ச்சி முடிந்த பிறகும் திவாகர் ஏன் சேரனை விமர்சிக்கிறார்?
பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய சேனலில், சேரன் Vs வாட்டர்மெலன் திவாகர் விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.. அதன் சுருக்கம் இதுதான்.
"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைச் சுருட்டிக்கொண்டு ரோட்டுக்குத்தான் போகும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஒருவருடைய இயல்பை எவ்வளவுதான் மாற்ற முயற்சி செய்தாலும், அவர் மீண்டும் தன்னுடைய பழைய இயல்புக்கே திரும்பிவிடுவார் என்பதுதான் இதன் பொருள்.

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்
சமீபகாலமாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். யூடியூப் சேனல்களுக்குச் சென்று சண்டை போடுவது, கேமரா, லைட்களை உடைப்பது, விஜய் டிவி நிகழ்ச்சியில் பிரச்சினை ஏற்படுத்தியது எனப் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது ஜெயா டிவியில் சேரன் தொகுத்து வழங்கும் "யார் சரி" நிகழ்ச்சியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் திவாகர் தன்னுடைய வழக்கமான பாணியில் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு மைம் கோபி அறிவுரை கூறியபோதுகூட அதை ஏற்றுக்கொள்ளாமல் அவரிடமும் வாக்குவாதம் செய்தார். ஒரு நல்ல மனிதர் அறிவுரை கூறும்போதுகூட அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாமல் பேசுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
சேரனுக்கும் திவாகருக்கும் விவாதம்
சேரனுக்கும் திவாகருக்கும் இடையே நடந்த விவாதமும் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக, நடிகர் சிவாஜி கணேசனுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதற்கு ஒரு வரம்பு வேண்டும் என்று சேரன் அறிவுறுத்தினார்.
ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகு திவாகர் தனியாக காணொளி வெளியிட்டு சேரனை விமர்சித்தார். உங்களுக்கு இப்போது மார்க்கெட் இல்லை, என்னைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்கள் என்பது போன்ற கருத்துகளையும் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் தனது ரசிகர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.
காதை அறுத்துக்கொள்ளட்டுமா
அதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சியில் இருப்பவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டும். எனக்குத்தான் அதிகமான ரசிகர்கள் வருவார்கள். அப்படி வரவில்லை என்றால் என் காதை அறுத்துக்கொள்கிறேன் என்றும் சவால் விட்டார்.
இங்கேதான் முக்கியமான கேள்வி வருகிறது. திவாகர் தன்னைப் பெரிய பிரபலமாகக் காட்டிக்கொள்ள விரும்புவது அவருடைய விருப்பம். ஆனால், அதற்காக மற்றவர்களை தரக்குறைவாக பேசுவது எந்த வகையில் நியாயம்?
சேரனை பொறுத்தவரை, நிகழ்ச்சியில் திவாகரின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருந்தாலும், அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் வாக்குவாதத்தில் இறங்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. ஒரு நிகழ்ச்சியை நடத்துபவருக்கு அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பும் இருக்கிறது. எல்லை மீறிப் பேசும்போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
டிஆர்பிக்காக இவ்வளவு
இன்னொரு விஷயம், திவாகரை நிகழ்ச்சிக்கு அழைத்ததே டிஆர்பிக்காகவா என்ற சந்தேகமும் எழுகிறது. அவருடைய சர்ச்சைகள் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கலாம் என்று நினைத்திருந்தால், அது டிவி நிகழ்ச்சிகளின் தரத்தையே பாதிக்கும்.
ஒரு பக்கம் சேரன் போன்றவர்களும், இன்னொரு பக்கம் திவாகர் போன்றவர்களும் ஒரே மேடையில் இருக்கும்போது இருவருடைய அணுகுமுறையிலும் வித்தியாசம் இருக்க வேண்டும். புகழ் என்பது வெறும் பார்வைகளாலும் சர்ச்சைகளாலும் மட்டும் கிடைப்பதில்லை. அதற்கு பின்னால் திறமையும் செயல்பாடும் இருக்க வேண்டும்.
எப்போதும் வரம்பு தேவை
சேரன் இதுபோன்ற சர்ச்சைகளில் தன்னுடைய நேரத்தையும் மதிப்பையும் செலவிட வேண்டுமா என்பதுதான் என்னுடைய கேள்வி. அதேபோல், திவாகரும் தன்னுடைய பேச்சுக்கும் செயலுக்கும் ஒரு வரம்பு வைத்துக்கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் நடந்ததைத் தாண்டி, வெளியே வந்து மீண்டும் மீண்டும் காணொளிகள் வெளியிட்டு மோதலை தொடர்வதால் யாருக்கு என்ன பயன்?
தொடக்கத்தில் சொன்ன பழமொழியை இப்போது மீண்டும் நினைத்து பாருங்கள். இந்தச் சம்பவத்தில் யார் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
