உச்சநீதிமன்றத்தின் ஈகோ! சபரிமலை தீர்ப்பும் கிடப்பில் தானே போடப்பட்டது.. கேள்வி கேட்கும் திருமாவளவன்
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் நாளை மாலை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் எடுக்கவும், மக்கள் யார் வேண்டுமானாலும் சென்று தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் மதநல்லிணக்க சூழல் பாதிக்கப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளன.

நவம்பர் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் உச்சநீதிமன்றம் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு முன், அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
இடைக்காலத் தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்? இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்சினையாகக் கருதுகிறதா?
சமூக நல்லிணக்கத்தை விடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா? எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே? குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்?
கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவ லிமையைக் காட்டும் ஈகோ தானே? இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?
சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே? இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது! என்று தெரிவித்துள்ளார். இதனிடையே திருப்பரங்குன்றத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
