திருப்பரங்குன்ற விவகாரம்.. தமிழக அரசு பிடிவாதத்தை நிறுத்தி கொள்ள வேண்டும்.. தவெகவை சாடிய அண்ணாமலை!
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு, பக்தர்களின் இறை உணர்வோடு விளையாடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் நாளை மாலை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் எடுக்கவும், மக்கள் யார் வேண்டுமானாலும் சென்று தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்துள்ளது.
நாளை நவம்பர் 28ஆம் தேதி மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை. இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதி செய்ய உதவும் என்று பதிவிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதிவு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications
