புது டெண்டர் இல்லை.. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை, பார்களுக்கான உரிமம் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான உரிமம், அடுத்த ஆண்டு நவம்பர் 28 வரை இன்னும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 4,000க்கும் அதிகமான கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மதுக்கடைகளை ஒட்டியுள்ள காலியிடங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக தனியாருக்கு பார் உரிமம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான பார் ஒப்பந்தம், இந்த ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சட்டசபை தேர்தல் காரணமாக மதுக்கூடங்களுக்கான ஒப்பந்த காலம் முதலில் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
உரிமக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய ஒப்பந்தங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அக்டோபர் 31 ஆம் தேதி வரை பார் உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் அது, நவம்பர் 29 வரை நீட்டிக்கப்பட்டது. புதிதாக பார் ஒப்பந்தம் வழங்குவதற்காக டெண்டர் கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்னும் ஓராண்டுக்கு பார் உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான உரிமம், நவம்பர் 29 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 28 வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட கடைகள் மற்றும் பார்களுக்குப் புதிய அங்கீகார உத்தரவுகளை வழங்க வேண்டும். அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, டாஸ்மாக் கடையை ஒட்டியோ அல்லது 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார் அமைக்கவேண்டும். சுத்தமான குடிநீர் மற்றும் கை கழுவும் வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
கடைகள் மற்றும் பார்கள் தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும். அனைத்துக் கடைகள் மற்றும் பார்களின் முன்பாகவும் தமிழில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டு, அதில் கடை எண், அங்கீகார விவரம், விலைப்பட்டியல் ஆகிய வாசகங்கள் தடித்த எழுத்துகளில் இடம் பெறவேண்டும்.
கடைகளின் தினசரி விற்பனை மற்றும் இருப்பு கணக்குகளை மின்னணு முறையில் பராமரிக்கவும், அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மற்றும் பார்களின் பட்டியலைச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
