உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தில் இருந்து தீயை எடுத்து தீபத்தூணில் விளக்கு! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து தீயை கொண்டு வந்து நாளை தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அது போல் சிக்கந்தர் தர்காவை சுற்றி 50 மீட்டர் தூரத்தில் பொதுமக்களும் விளக்கேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது தொடர்பான வழக்கில் கடந்த 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதாவது இந்த ஒரு முறை ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இனி வரும் ஆண்டுகளுக்கு பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபத்தின் போது மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் உச்சிபிள்ளையார் கோயிலில்தான் தீபமேற்றப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 25 ஆம் தேதி முதல் நடந்து வரும் நிலையில் இன்று உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் "தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என நவம்பர் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இது எங்களுக்கு வேதனையை கொடுக்கிறது.
இது போன்ற நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். இல்லாவிட்டால் அரசியலமைப்புச் சார்ந்த குழப்பங்களுக்கு வழிவகுக்கும். தமிழகத்தில் குறைந்தபட்சம் மதுரையில் ஒரு நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகளை பார்த்தாலே தெரிகிறது.
எத்தனை உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும் நீதித்துறையின் நீரோட்டத்தை மாசுப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்படாது என்ற செய்தியையே இந்த உத்தரவின் மூலம் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். தீபத்தூணில் தீபமேற்றாத பழியை மொத்தமாக கோயில் நிர்வாகத்தின் மீது மதுரை ஆட்சியர் சுமத்தியுள்ளார் என்பதால் அவரது அறிக்கையை நிராகரிக்கிறோம். அந்த அறிக்கையில் ஆட்சியர் முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.
நாளை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். கடந்த 24 ஆம் தேதி உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து தீயை எடுத்துக் கொண்டு தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். சிக்கந்தர் தர்காவை சுற்றி 50 மீட்டர் தூரத்தில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். திருப்பரங்குன்றம் மலை பகுதி முழுவதும் CRPF கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். தர்காவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தர்காவிற்கு செல்வோரை யாரும் தடுக்கக் கூடாது. தர்காவையும் கோயிலையும் வேறுபடுத்தி காட்டும் வகையில் வேலி அமைத்துக் கொள்ளலாம்" என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.



Click it and Unblock the Notifications
