delimitation.. தமிழ்நாட்டில் எம்பிக்கள் எண்ணிக்கை எவ்வளவு உயரும்.. திமுக கேட்கும் பாதுகாப்பு என்ன?
சென்னை: வரும் நவம்பர் 30 முதல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி உள்ளார். மக்களவை இடங்களின் மொத்த எண்ணிக்கை அதிகரித்தாலும், தமிழ்நாட்டிற்கான தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் பட்சத்தில், இந்த மசோதாவை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று கூறினார். அதன்படி தொகுதி வரையறை மசோதா நிறைவேறினால் தமிழ்நாட்டிற்கு தற்போது உள்ள 39 தொகுதிகள் என்பதில் இருந்து 20 அதிகரித்து 59 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.

திமுக வைத்த நிபந்தனைகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!" என்று கூறியிருந்தார்.
இந்த நிபந்தனைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சம்மதித்துள்ளதாகவே தெரிகிறது. எனினும் திமுக இந்த மசோதாவை ஆதரிக்கும் முன்பு, மசோதாவின் வரைவு நகல் கிடைத்த பிறகுதான் ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவெடுக்க உள்ளதாம்.
திமுக கேட்கும் சட்ட பாதுகாப்பு
திமுகவை பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்பதற்கான தெளிவான உறுதிமொழி மசோதாவின் வரைவு நகலில் இடம்பெற்றால், திமுக அதை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்க உள்ளது. அதுமட்டுமல்ல, 19971ம் ஆண்டு விகிதாசாரத்தின்படியே தொகுதி எண்ணிக்கைகள் மாற்றப்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாத சட்ட பாதுகாப்பினை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்று திமுக விரும்புகிறது. இதுதான் இப்போதைக்கு பாஜக திமுக இடையே விவாதமாக ஓடுவதாக கூறப்படுகிறது.
அமித்ஷா தந்த உறுதி
இந்த மசோதா நிறைவேறினால், " மக்களவை இடங்கள் 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுயிருந்தார். ஒருவேளை தொகுதி மறுவரையறை ஆணையம் உள்துறை அமைச்சரின் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என்னவாகும்? நாங்கள் நீதிக்காக யாரிடம் செல்வது?" என்று திமுக தயங்குகிறது. மேலும், தென்னிந்திய மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்க அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதம் தேவை என்றும் திமுக வலியுறுத்துகிறது.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவரை, மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை திமுக விரும்புகிறது.
மத்திய அரசின் திட்டத்தின்படி, அனைத்து மாநிலங்களிலும் மக்களவை இடங்களைச் சீராக 50 சதவீதம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து 816-ஆக உயர உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இடங்களை 50 சதவீதம் அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரப்பூர்வ திருத்தத்துடன் மசோதா தாக்கலாகும் என தெரிகிறது.
தமிழ்நாட்டிற்கு 59
அப்படி நிறைவேறினால், தமிழ்நாட்டிற்கு 39 ஆக உள்ள நிலையில், தொகுதி எண்ணிக்கை 59 ஆக உயரும். அதேபோல் உத்தரப் பிரதேசத்திற்கு 80 தொகுதி என்பது 120 தொகுதியாக உயரும். பீகாருக்கு 40 ஆக உள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 60 ஆக அதிகரிக்கும். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 48 எம்பிக்கள் உள்ள நிலையில் 72 ஆக உயரும். மேற்கு வங்கத்திற்கு 42 ஆக உள்ள நிலையில் 63 ஆக உயரும். கர்நாடாகவிற்கு 28 ஆக உள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 42 ஆக உயரும். கேரளாவிற்கு 20 ஆக உள்ள லோக்சபா எம்பிக்கள் எண்ணிக்கை 30 ஆக உயரும். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் 1971ம் ஆண்டு விகிதாச்சார அடிப்படையில் உயரும்.




Click it and Unblock the Notifications
