ஸ்டாலின் போட்ட இரண்டு நிபந்தனைகள்.. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தர ரெடியாகும் திமுக?
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கிடையே இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க திமுக இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் நலனை பாதிக்காத வகையில் மசோதா கொண்டு வரப்பட்டால் அதை ஆதரிக்க தயாராக இருப்பதாக திமுக தரப்பு கூறியுள்ளது.
லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 தேர்தலுக்கு முன்பே அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த அரசியலமைப்பு திருத்த மசோதா என்பதால் இதை நிறைவேற்ற 3ல் இரு பங்கு ஆதரவு தேவைப்படும். இருப்பினும், கடந்த முறை போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது.

இரு முக்கிய நிபந்தனைகள்
இதற்கிடையே மீண்டும் இந்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே அடுத்த வாரம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை நிறைவேற்ற வேண்டும் என்றால் 22 எம்பிக்களை கொண்ட திமுக மற்றும் 8 எம்பிக்களை கொண்ட சரத் பவார் ஆட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும். இருப்பினும், இந்த மசோதாவை ஆதரிக்க திமுக இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நிபந்தனை
அதாவது நாடாளுமன்றத்தில் இப்போது தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.2ஆக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகும், நாடாளுமன்றத்தில் இதே 7.2% என்ற அளவில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் மறுவரையறை இருக்க வேண்டும் என்பதே முதல் நிபந்தனை. இதை ஒப்புக்கொள்ள மத்திய அரசு ரெடியாக இருப்பதாகவே தெரிகிறது.
இரண்டாவது நிபந்தனை
இரண்டாவது முக்கிய கோரிக்கையாக.. மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அடுத்த தொகுதி மறுவரையறை குறைந்தது 25 ஆண்டுகளுக்கு பிறகே நடைபெறும் வகையில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் திமுக வலியுறுத்துகிறது. இதுவே திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட இரு முக்கிய கோரிக்கைகளாகும்.
இது தொடர்பாக திமுக வட்டாரங்கள் கூறுகையில், "தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும், அடுத்த தொகுதி மறுவரையறை 25 ஆண்டுகளுக்கு பிறகே மேற்கொள்ளப்படும் என்றும் புதிய மசோதாவில் உறுதி செய்யப்பட்டால், அது தமிழகத்துக்கு நியாயமான மற்றும் பயனுள்ள முடிவாக இருக்கும்" என்றனர்.
திமுக தரப்பு
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு தொகுதி மறுவரையறை செய்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்பதாலேயே இத்தனை காலமாக இதை எதிர்த்து வந்ததாக திமுக தரப்பு கூறுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு இல்லாமல் மொத்தமாக 50% அதிகரிப்பது சரியானதாக இருக்கும் என்றும் கூறுகிறது.
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இத தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பழைய மசோதாவை திமுக எதிர்த்ததாகவும், புதிய மசோதா தமிழகத்தின் கருத்துகளையும் மாநிலங்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் இருந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். மசோதாவை பார்த்த பிறகே அது தமிழகத்தை பாதிக்குமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேறும்?
இதற்கிடையே பிராந்திய சமநிலை உறுதி செய்யப்பட்டால் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்போம் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. திமுக, சரத் பவார் என்சிபி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் என பல பிராந்திய கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி வருவதால் இந்த முறை தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேறும் என்றே தெரிகிறது.




Click it and Unblock the Notifications
