தொகுதி மறுவரையறை.. எம்பிக்கள் கூட்டத்தை கூட்டிய ஸ்டாலின்.. நாளை முக்கிய முடிவு எடுக்கும் திமுக?
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி-க்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 30ஆம் தேதி கூடுகிறது. நவம்பர் 30ஆம் தேதி லோக் சபாவும், டிசம்பர் 2ஆம் தேதி ராஜ்ய சபாவும் கூட உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே மார்ச் மாதத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்ட போது தோற்கடிக்கப்பட்டது.

அந்த மசோதாவை தோற்கடித்ததில் திமுக முக்கிய பங்காற்றியது. தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எதிர்த்து அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின் எதிர்ப்பை பதிவு செய்தார். தற்போது திமுக உடனான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறிவிட்டது. இதனால் திமுகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற திமுகவின் 30 எம்பிக்களின் ஆதரவு பாஜகவுக்கு கட்டாயம் தேவையாக உள்ளது. இதனால் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு கொடுக்க திமுக வைத்த கோரிக்கைகள் குறித்து பாஜக பரிசீலனை செய்வதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்களின் இரு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டின் 7.18% பிரதிநிதித்துவம் குறையக் கூடாது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் கூடாது ஆகிய நிலைப்பாட்டில் திமுக இன்றும், என்றும் உறுதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எம்பிக்கள் கூட்டத்தில் திமுகவின் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



Click it and Unblock the Notifications
