வனத்துறை நிகழ்ச்சியில் தவெக MLA அருள் விக்னேஷ் என்ன செய்தார்? ஊழியர்களிடம் விசாரித்த சிருஷ்டி சிங்
சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்திய சிறப்பு அதிகாரி சிருஷ்டி சிங், இப்போது வனத்துறை ஊழியர்களிடமும் விசாரித்துள்ளார். அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், வனத்துறை நிகழ்ச்சியில் எம்எல்ஏ நடந்துகொண்ட விதம் குறித்தும் விசாரணை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அருள் விக்னேஷ்
மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது... இந்த வழக்கில் அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரணையை மேற்பார்வையிடும் பொறுப்பு ஐஜி காமினிக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, தமிழக அரசு 4 பேர் கொண்ட உள்விசாரணை குழுவையும் அமைத்தது. இந்த குழு 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வனத்துறை சார்பில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அருள் விக்னேஷ் நடந்துகொண்ட விதம் குறித்தும் விசாரணை நடந்துள்ளது.... இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த வன அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களிடம் சிறப்பு அதிகாரி சிருஷ்டி சிங் விவரங்களைக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்திய அவர், இப்போது வனத்துறை ஊழியர்களிடமும் விசாரித்திருப்பது இந்த வழக்கில் விசாரணையின் அடுத்த கட்டமாக அமைந்துள்ளது.
ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட கலெக்டரே புகார் அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சியருக்கே இந்த நிலையென்றால் சாதாரண பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்றும் தமிழக அரசை விமர்சித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
புரோட்டா மாஸ்டர் புகார்
இந்த நிலையில், அருள் விக்னேஷ் மீது இன்னொரு குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இந்தப் புகாரை முன்வைத்துள்ளார். இவர் அருள் விக்னேஷின் வீட்டுக்கு அருகிலுள்ள அய்யனார் மெஸ் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். சுமார் 2 மாதங்களுக்கு முன்பு நள்ளிரவில் புல்லட்டில் வந்த அருள் விக்னேஷ், தனது பைக்கில் மீது மோதியதாக சுரேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்துக் கேட்டபோது, தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கவும் வந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது அருள் விக்னேஷ் மது போதையில் இருந்ததாகவும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் புகார் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், அடுத்து ஒரு ஹோட்டல் ஊழியரும் அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை தந்துள்ளது...!!


Click it and Unblock the Notifications
