ஆதவ் அர்ஜுனா மவுனம் குறித்து பேச முடியாது! ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விமர்சனம்
கோவை: ஆதவ் அர்ஜுனா தனது ஆளுமைதான் மேலோங்க வேண்டும் என நினைப்பவர், அவரது மௌனம் குறித்து கருத்துச் சொல்ல முடியாது என லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதால் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம்.

இது தொடர்பாக உரிய புகார் அளித்துள்ளோம். கொசுகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தற்போது பலரும் மௌனம் காத்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்த அமைச்சர்கள்கூட தற்போது அமைதியாக இருப்பது ஏன்?
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களுக்கு எவ்வாறு நியாயம் கிடைக்கும்? போதைப்பொருள் ஒழிப்பு என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், இதுவரை போதைப்பொருள் விவகாரத்தில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிடக் கட்சிகள் அழிவைச் சந்தித்து வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் கவனிக்க வேண்டும்.
அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கட்சிகளின் செயல்பாடுகள்தான் அவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். தமிழகத்தில் இருந்து தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுள்ளன. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்குவதன் மூலம் முதலீடுகளை ஈர்த்து விட்டதாகக் கூறுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் விவகாரத்தில் எங்களையும் அவர்களையும் ஒப்பிட்டுப் பேசுவது பொருத்தமற்றது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மாற்றம் என்று கூறினார்கள்; ஆனால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றார். ஆதவ் அர்ஜுனா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனது ஆளுமைதான் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா நினைப்பார்.
இதைத்தான் தொடர்ந்து கூறி வருகிறேன். அவருடைய மௌனம் குறித்து என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியாது என்றார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த ஆட்சியின் போதும், இந்த ஆட்சியின் போதும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நடந்துள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications
