தமிழ்நாட்டை பகைச்சுக்க முடியாது.. தொகுதி மறுவரையறையில் அகிலேஷ் யாதவ் எடுத்த அதிரடி நிலைப்பாடு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நவ.30 தொடங்கி டிச.3 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இதில் மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார்.

மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப.. மக்களவை, சட்டமன்ற தொகுதிகளை அதிகரிப்பதுதான் தொகுதி மறுவரையறை மசோதா. பிரச்சனை என்னவெனில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படும். எனவே இந்த மசோதாவை தென் மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. வட மாநிலங்கள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன.

Delimitation Akhilesh Yadav Tamil Nadu

வெளிப்படையாக எதிர்க்கும் அகிலேஷ் யாதவ்

குறிப்பாக உத்தரப் பிரதேச அரசு, இந்த மசோதாவை வரவேற்கிறது. ஆனால், உ.பி எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எதிர்க்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில், 'தொகுதி மறுவரையறை என்பது பாஜகவின் அரசியலில் மிகப்பெரிய தவறாக அமையப்போகிறது' என்று பதிவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டை ஒப்பிடும்போது, இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால்.. உ.பியின் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இருந்தாலும் அகிலேஷ் யாதவ் இதை எதிர்ப்பது ஏன்? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

ஜெர்ரிமேண்டரிங் தியரி

அரசியலில் 'ஜெர்ரிமேண்டரிங்' என்கிற ஒரு தியரி இருக்கிறது. அதாவது ஒரு தொகுதியின் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம், எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை சிதறடித்து.. அதை ஆளும் கட்சிக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ள முடியும். தொகுதி மறுவரையறை விஷயத்தில் இதைத்தான் மத்திய அரசு செய்ய காத்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு பலம் அதன் யாதவ மற்றும் முஸ்லீம் வாக்குகளில்தான் இருக்கிறது. இதை உடைக்க பாஜக நினைக்கிறது என்ற அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டுகிறார்.

வாக்காளர்களை குறைக்கும் யுக்தி

அதாவது சமாஜ்வாதிக்கு 40% மற்றும் அதற்கு மேல் வாக்குகள் உள்ள தொகுதிகளில்.. இந்த வாக்குகளை 20-25% என குறைக்க 'தொகுதி மறுவரையறையை' பாஜக பயன்படுத்துவதாக அகிலேஷ் குற்றம்சாட்டுகிறார். எந்த தொகுதிகளிலும், 20-25% வாக்குகளை வைத்து ஜெயிக்க முடியாது. அதேபோல பல ஆண்டு காலமாக தொகுதி மக்களுடன் கட்சி தலைவர்கள் கொண்டுள்ள தொடர்பு.. இந்த தொகுதி மறுவரையறை மூலம் துண்டிக்கப்படும் என்றும் சமாஜ்வாதி அஞ்சுகிறது.

ஓபிசி மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடையாது

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் OBC இட ஒதுக்கீடு அரசியல்தான். உ.பியில் தொகுதிகள் அதிகரிக்கப்படும்போது.. தற்போதைய விதிகளின்படி பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே மக்கள் தொகைக்கு ஏற்பட இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஆனால், உ.பி அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள பிற்படுத்தப்பட்ட ஓபிசி மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல்..தொகுதி மறுவரையறையை கொண்டு வந்தால், பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் பறிபோகும் என பிரச்சாரம் செய்வதன் மூலம்.. 2027 தேர்தலில் தனது PDA (பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர்) வாக்கு வங்கியை தக்க வைக்க அகிலேஷ் முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டை பகைத்துக்கொள்ள அகிலேஷ் விரும்பவில்லை

அதேபோல என்னதான் தொகுதிகள் அதிகரித்தாலும், அது ஒட்டுமொத்த பாஜகவின் அதிகார குவிப்புக்கே வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் தென்மாநில கட்சிகளின் ஆதரவு சமாஜ்வாதி கட்சிக்கு தேவை. குறிப்பாக தமிழ்நாடு. தற்போது தவெக அரசு தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறது. இப்படி தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும் ஒரு திட்டத்தை அகிலேஷ் ஆதரித்தால்.. தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உடைந்துவிடும். எனவே தமிழ்நாட்டை பகைத்துக்கொள்ள அகிலேஷ் விரும்பவில்லை.

பெண்களுக்கான உள் ஒதுக்கீடு

இதைவிட முக்கியமான விஷயம், 33% மகளிர் இட ஒதுக்கீட்டுக்குள் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே சமாஜ்வாதி கட்சியின் நீண்டகால கோரிக்கையாகும். அதனை நிறைவேற்றாமல் தொகுதி மறுவரையறை மூலம் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் அது ஆதிக்க சாதியினருக்கே பலன் தரும் என்று அகிலேஷ் வாதிடுகிறார்.

இந்த பின்னணியில்தான் அவர் தொகுதி மறுவரையறை மசோதவை எதிர்க்கிறார். மற்ற மசோதாக்களை போல, இந்த மசோதாவை ஆளும் கட்சியால் அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றிவிட முடியாது. காரணம், இது அரசியலமைப்பு திருத்த மசோதாவாகும். எனவே, நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும். இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அவசியம். இந்த நம்பர் கேமில் கடந்த முறை மத்திய அரசு தோற்றுவிட்டது. இந்த முறை எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்பதால், சில மாற்றங்களையும் மத்திய அரசு செய்திருக்கிறது.

இந்த மாற்றங்களுடன் முன்வைக்கப்படும் மசோதா நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+