கார்த்தி சிதம்பரம் டென்ஷன்.. தவெக எம்எல்ஏக்கள் எங்கே? சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் என்ன நடந்தது?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற திஷா கூட்டத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்காதது, கார்த்தி சிதம்பரத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரச்சனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்காமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக கார்த்தி தெரிவித்துள்ளார். இதே செய்தியாளர் சந்திப்பில் திமுக, ஆளுநர் விவகாரம் தொடங்கி பல்வேறு அரசியல் பிரச்சனைகள் குறித்தும் தனது கருத்துகளையும் அவர் வெளிப்படையாகவே பகிர்ந்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டார்.

திஷா கூட்டம்
அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான நலத்திட்டங்கள் எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த திஷா (DISHA) கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை மாவட்ட ஆட்சியரும் உறுதி செய்திருந்தார். ஆனால், தவெக எம்எல்ஏக்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.
உதவியாளர்களின் கையெழுத்து
கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியபோது, "மத்திய அரசின் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தவெக எம்எல்ஏக்கள் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளாமல் அவரது உதவியாளர் பங்கேற்று கையெழுத்து போட்டது தவறு. அதனால் அந்த கையெழுத்தை நீக்கிவிட்டோம்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு தலைமைச் செயலரிடம் வந்தபோதே அவர் மாவட்ட ஆட்சியரை அழைத்து புகார் வாங்கி இருக்க வேண்டும். தவெக கட்சியும் தனது சட்டமன்ற உறுப்பினரிடம் விளக்கத்தை பெற்று முதல்வரிடம் வழங்கி இருக்க வேண்டும். முதல்வர் இரண்டையும் பார்த்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போது டைம் லேப்ஸ் ஆகிவிட்டது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எம்எல்ஏவை கைது செய்வதா, வேண்டாமா என்பதை விசாரணை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆளுநரை ஆட்டுக்கு தாடி என்பதும், எதிர்க்கட்சியான பிறகு அவரை நடுவராகப் பார்ப்பதும் திமுகவின் நிலைப்பாடு. விசாரிக்க வேண்டிய நபர்களை நோட்டீஸ் கொடுத்து அழைப்பதே சிறந்தது. காட்சி ஊடகங்களுக்காக உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததும் தவறு.
தவெக எம்எல்ஏக்கள் எங்கே
இணையம் மற்றும் சமூக ஊடகங்களை அரசுகளால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. சமுதாய விழிப்புணர்வு மூலமே மாற்றத்தை கொண்டு வர முடியும். திருப்பரங்குன்றம் தீப பிரச்சனையை மதப் பழக்கத்துக்கு தடை வந்ததாக நினைப்பது தவறு. புதிதாக உருவாக்கப்படுகின்ற சடங்குகளுக்கு அரசியல் சாயம் பூசப்படுகிறது.
கொலை, கொள்ளைகளை தடுப்பதற்கு கடந்த ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அரசும் 6 மாதத்தில் குற்றங்களைக் குறைக்க புதிய முயற்சிகளை எடுத்ததாகத் தெரியவில்லை" என்றெல்லாம் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
வராத சட்டமன்ற உறுப்பினர்கள்
அதேபோல இதே அதிருப்தியை தனது சோஷியல் மீடியா பதிவிலும் கார்த்திக் சிதம்பரம் வெளிப்படுத்தியுள்ளார்.. "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் திஷா கூட்டத்தை புறக்கணிப்பது, தங்கள் பொறுப்பிலிருந்து தவறுவதாகும். இன்று சிவகங்கையில் நடைபெற்ற திஷா கூட்டத்தில் த.வெ.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளாக தான் நடத்திய பெரும்பாலான திஷா கூட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யவும், தொகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லவும் இந்த கூட்டம் நல்ல வாய்ப்பாக இருக்கிறது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
திஷா கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது அவர்களின் பொறுப்பு என்பதை வலியுறுத்திய கார்த்தி சிதம்பரம், அதே சந்திப்பில் தமிழக அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு விவகாரங்களிலும் தனது கருத்துகளை தெரிவித்திருப்பதெரிவித்துள்ளது, அரசியல் களத்தின் கவனத்தை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
