திருப்பரங்குன்ற கோயில் அறங்காவலர் குழுவில் இந்து அல்லாதவர்! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை மீது, கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவு மீறப்பட்டிருப்பதாகவும், எனவே மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு வாதங்களை முன்வைத்திருக்கிறது. மட்டுமல்லாது கோயில் அறங்காவலர் குழுவில் இந்து அல்லாதவர் இடம் பெற்றிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற உத்தரவும் மீறுதலும்
நவம்பர் 24ஆம் தேதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் ஒரு முறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. ஆனால், நவம்பர் 24ஆம் தேதி அன்று வழக்கம் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்றம் சொன்ன தீப தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. கோயில் அறங்காவலர் குழு அனுமதி அளிக்கவில்லை என.. தமிழக அரசும், மதுரை மாவட்ட ஆட்சியரும் காரணம் கூறி விளக்கம் அளித்திருந்தனர்.
இன்று விசாரணை
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக கூறி தொடரப்பட்ட அவமதிப்பு மனுக்கள் மற்றும் நீதிமன்றம் சொன்ன தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரும் புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், மற்றொரு பக்தர் தரப்பில் வழக்கறிஞர் சாய் தீபக், இந்திய தொல்லியல் துறை தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
புதிய அறங்காவலர் குழு
விசாரணையில், தீப தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பது உறுதியான உண்மையா? என நீதிபதி கேட்டதற்கு மனுதாரர் தரப்பு ஆம் என்று பதில் அளித்து இருந்தது. மட்டுமல்லாது, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் தடுக்க திட்டமிட்ட சதி நடந்துள்ளது என்றும் வாதிட்டது.
தொடர்ந்து வாதங்களை முன்வைத்த மனுதாரர் தரப்பு, "தமிழக சட்ட அமைச்சரும் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் இதற்கு பொறுப்பாவார்கள். நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு வசதியாக நவம்பர் 13 அன்று தான் அவசர, அவசரமாக புதிய அறங்காவலர் குழு உருவாக்கப்பட்டது. அதில் ஒரு அறங்காவலர் (ரெஜினா) இந்து மதத்தை பின்பற்றாதவர். மற்றொருவர் (சண்முகசுந்தரம்) ஏற்கனவே தீபம் ஏற்றுவதை எதிர்த்த அமைப்பை சேர்ந்தவர்.
போலியான தீர்மானம்
வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற வேண்டும் என கோயில் அர்ச்சகர்கள் கூறியதாக அறங்காவலர் குழு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தங்களிடம் ஆலோசிக்காமலேயே தங்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்டதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என அர்ச்சகர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்" இதை சுட்டிக்காட்டி.. இது போலியான தீர்மானம் என வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதங்களை முன்வைத்தார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம்
தீபம் ஏற்றுவதற்கான பொறுப்பு.. ஆட்சியர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சியர் 144 தடை உத்தரவு போடுவது உள்ளிட்ட மற்ற எல்லா வேலைகளையும் செய்தாரே தவிர.. தீபம் ஏற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியரின் அறிக்கையே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் போன்றதுதான் என்றும் அனல் பறக்க வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
3 கோரிக்கைகள்
இதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
1. தற்போதுள்ள அறங்காவலர் குழுவை உடனடியாக நீக்க வேண்டும்.
2. கார்த்திகை தீபத் திருவிழா 11 நாட்கள் நடைபெறுவதால், உச்சிப் பிள்ளையார் கோயிலில் இன்னும் எரிந்து கொண்டிருக்கும் தீப சுடரை கொண்டு.. நீதிமன்றம் சொன்ன தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்.
3. அந்த இடத்தை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்
என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications
