டிசம்பர் 15க்குள் தீபம் ஏற்ற உத்தரவிடுங்கள்! திருப்பரங்குன்றம் கேசில்.. உச்ச நீதிமன்றத்தில் ட்விஸ்ட்
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பாகத் தமிழக அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று தொடங்கியுள்ளது. இந்த விசாரணையின்போது, கார்த்திகை மாதம் டிசம்பர் 15-ம் தேதி வரை உள்ளதால், டிசம்பர் 5 அல்லது டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் கறார் நிலைப்பாடு
நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் தொடக்கத்திலேயே நீதிபதிகள், இந்த விவகாரத்தின் பிரதான வழக்குக்குள் நாங்கள் இப்போது செல்லவில்லை. கடந்த நவம்பர் 20-ம் தேதி நாங்கள் பிறப்பித்த உத்தரவு ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பது குறித்து மட்டுமே இன்று விசாரிக்கிறோம். தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

டிசம்பர் 15 வரை கால அவகாசம் உள்ளது - மனுதாரர்கள் வாதம்
அவமதிப்பு மனுதாரர்களான ராமசுப்பு மற்றும் ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், "கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு முடிந்துவிட்டதாகக் கூற முடியாது. வரும் டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் தீபம் ஏற்ற முடியும். மேலும், கார்த்திகை மாதம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீடிக்கிறது. எனவே, டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உடனடியாக உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில், அடுத்த ஆண்டு இந்த உத்தரவைச் செயல்படுத்துகிறோம் எனக் கூறியிருப்பதையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
அறங்காவலர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது சரமாரிப் புகார்
மற்றொரு மனுதாரரான கார்த்திகேயன் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்
உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் முழுப் பொறுப்பும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடமே இருந்தது. ஆனால், அதிகாரிகள் நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டனர்.
கடந்த நவம்பர் 13-ம் தேதிதான் அரசியல் பின்னணியுடன் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்தவரே இல்லை. தீபம் ஏற்றக் கூடாது என அறங்காவலர்கள் மாலை 4 மணிக்கு மேல் தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறுவது, தங்களது தவறை மறைக்க அதிகாரிகள் ஆடும் நாடகம்.
கோவில் ஸ்தானிகர்கள் (அர்ச்சகர்கள்) ஆலோசனைப்படியே பழைய இடத்தில் தீபம் ஏற்றியதாகக் கூறப்பட்டது. ஆனால், தங்களிடம் எதுவும் கேட்கப்படவில்லை என ஸ்தானிகர்களே இப்போது பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு (ASI) தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் வாதம்
இந்தியத் தொல்லியல் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தமிழக அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்:
மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள அறிக்கை வெறும் கண்துடைப்பு. நவம்பர் 24-ம் தேதி மதியம் 3.15 மணிக்கு மலைக்குச் சென்ற தொல்லியல் துறை அதிகாரிகளைத் தமிழகப் போலீசார் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். மாலை 6 மணிக்கு அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் போலீசார் கூறிவிட்டனர்.
இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு. உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் வரை, தமிழக அரசுத் தரப்பு வாதங்களை நீதிமன்றம் கேட்கக் கூடாது.
உள்ளூர் போலீசாரை நம்ப முடியாது. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமித்து, மத்தியப் பாதுகாப்புப் படையின் உதவியுடன் நாளை அல்லது ஏதேனும் ஒரு நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்" எனத் துஷார் மேத்தா வலியுறுத்தினார்.
தலைமைச் செயலாளர், டிஜிபி பெயரைக் கேட்ட நீதிபதிகள்
இறுதியாக, தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் திரும்பிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தினீர்களா? தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோரின் பெயர்கள் என்ன? எனக் கேள்வி எழுப்பினர். அதற்குத் தமிழக அரசுத் தரப்பில், "தலைமைச் செயலாளர் சாய் குமார் ஐஏஎஸ், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்" எனப் பதிலளிக்கப்பட்டது. இதனால், உயர் அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
