வேறொரு அமைப்பு மூலம் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய தொல்லியல் துறை வாதம்
டெல்லி: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவு மீறப்பட்டிருப்பதாகவும், எனவே வேறொரு அமைப்பை கொண்டு தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய தொல்லியல் துறை வலியுறுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவு அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விசாரணையில் மத்திய தொல்லியல் துறை வைத்திருக்கும் வாதங்கள் கவனம் பெற்றிருக்கிறது.

தொல்லியல் துறை தரப்பு வாதங்கள்
திருப்பரங்குன்றம் தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டம் வெறும் கண்துடைப்பு என்று மத்திய தொல்லியல் துறை விமர்சித்துள்ளது. தொல்லியல்துறை சார்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் பக்தர்கள் தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் சாய் தீபக் ஆகியோர் மிகக் கடுமையான வாதங்களை முன் வைத்திருக்கின்றனர்.
அறிக்கையை வாசித்த துஷார் மேத்தா
தொல்லியல்துறை தரப்பில், திருச்சி வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அளித்துள்ள அறிக்கையை துஷார் மேத்தா நீதிமன்றத்தில் வாசித்தார். அதில், மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டம் வெறும் கண்துடைப்பு என்றும், தர்கா பகுதி வரை சென்ற தொல்லியல் துறை குழுவை.. காவல்துறை தடுத்து நிறுத்தி, தீப தூண் இருக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும் தெரவிக்கப்பட்டிருப்பதாவும் மேத்தா கூறினார்.
எந்த ஏற்பாடும் செய்யவில்லை
அதேபோல மேலிடத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை என தேவஸ்தான பிரதிநிதிகள் கூறியதாகவும், மாலை 6:30-7:00 மணி அளவில் காவல்துறை தொல்லியல்துறையினரை திருப்பி செல்லுமாறு கூறியதாகவும், தொல்லியல்துறை குழு அங்கேயே காத்திருந்த போதும்.. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தீபம் ஏற்ற எந்த ஏற்பாடும் செய்யவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று மேத்தா கூறியுள்ளார்.
குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பாகும்
சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை என்பதற்காக.. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது! என்ன நடந்தாலும் சரி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என அரசு தரப்பு முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுவது, அரசியலமைப்பு சட்டம் 129 எனில் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று மேத்தா வாதங்களை முன்வைத்தார்.
வேறு ஒரு அமைப்பு மூலம் தீபம் ஏற்ற வேண்டும்
அவமதிப்பு செய்தவர்களின் வாதங்களை கேட்பதற்கு முன்பாக.. முதலில் அவர்கள் செய்த தவறுக்கு பிரயாசித்தமாக, தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும். உள்ளூர் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததால்.. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில், 'வேறொரு அமைப்பு' மூலம் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார். இதற்கு ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆட்சேபம் தெரிவித்தார்.
தொடர்ந்து வாதங்களை முன் வைத்த மேத்தா.. குறிப்பிட்ட ஒரு தேதி, அதாவது கார்த்திகை தீபத் திருநாள் முடிந்துவிட்டது என்கிற காரணத்தை காட்டி.. உத்தரவை நிறைவேற்றாமல் தப்பிக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.
அதேபோல பக்தர்கள் தரப்பு வழக்கறிஞர் சாய் தீபக் வாதாடுகையில், நவம்பர் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வாசித்த அவர்.. 'தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபம் ஏற்ற வேண்டும். அந்த குழுவில் யார்? யார்? இடம் பெறுவார்கள் என்பதை மாவட்ட ஆட்சியர், செயல் அலுவலர், தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்' என்பதே உத்தரவு என்றார்.
இதில் கோயில் நிர்வாகமோ அல்லது அதிகாரிகளோ தங்கள் விருப்பம் போல் செயல்பட எந்த இடமும் வழங்கப்படவில்லை. இது அனுமதி அல்ல நேரடி உத்தரவு. இந்து சமய அறநிலைத்துறை சட்டம் பிரிவு 46ன் கீழ் உத்தரவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு தான் அரசு இந்த 5 அறங்காவலர்களை நியமித்தது. அரசு நியமித்த இந்த அறங்காவலர்களை வைத்து நீதிமன்ற உத்தரவின் மீது அரசு துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது. நவம்பர் 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதிகளில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர்.. நவம்பர் 24ஆம் தேதி மாலை 4.45 மணி வரை உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் அறங்காவலர் குழு அனுமதி அளிக்கவில்லை என்ற தகவலை தெரிவிக்கவே இல்லை. கடைசி நேரத்தில் 5 அறங்காவலர்கள் சேர்ந்து நீதிமன்ற உத்தரவை தோற்கடித்து இருப்பது திட்டமிட்ட சதி.
அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என அரசு நினைத்து இதை தடுத்துள்ளது. ஆனால், தமிழ் நாட்காட்டி மற்றும் ஆகம விதிகளின்படி.. கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து தீபம் ஏற்ற வேண்டும். மேலும், தீப தூண் என்பது ஆங்கிலேயர் காலத்து நில அளவை கல் அல்ல. அது 18 கோயில்களில் உள்ள பாரம்பரிய தூண். உச்சி பிள்ளையார் கோயில் அருகே உள்ள இடம், 1996க்கு முன்பு வரை முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றவே பயன்படுத்தப்பட்டது என சாய் தீபக் விளக்கம் கொடுத்திருந்தார்.
மேலும் அரசின் கை பாவையாக செயல்பட்ட அறங்காவலர் குழுவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.. உடனடியாக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications
