மேலே போனதும் பாம்பு கொத்தி கீழே வரும் பரமபதமா தவெக.. மறுபடியும் 107 ஆக சரியும் எம்எல்ஏக்கள்?
சென்னை: என்ன தான் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் ஜெயித்து 108க்கு எண்ணிக்கையை கூட்டினாலும், கொளத்தூர் பாபு மறைவு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஒரு வேளை ராஜினாமா செய்யும் நிலை வந்தால் 107க்கே தவெக வர வாய்ப்பு உள்ளது. அதாவது தொடங்குன இடத்துக்கே வர வாய்ப்பு உள்ளது.. மேலே போனதும் பாம்பு கொத்தி கீழே வரும் பரமபதமாக மாறிவிட்டது தவெக
அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளத்தில் ஒரு மீம்ஸ் பகிர்ந்து இருந்தனர். எடப்பாடி பழனிசாமியே பேசுவது போல் இருந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி, விஜய்யிடம் பேசும் போது, நேர்மையாக ஜெயித்த என்னுடைய எம்எல்ஏக்கள் இரண்டு பேரை தவறான வழியில் ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை தவெக எம்எல்ஏக்கள் ஆக்கினீர்கள். இப்போது நீங்கள் நேர் வழியில் ஜெயித்த இரண்டு எம்எல்ஏக்களின் பதவி பறிபோக போகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசுவதாக மீம்ஸ் இருந்தது.

இது போன்ற மீம்ஸ்கள் அண்மை காலத்தில் அதிகாக வந்த வண்ணம் உள்ளது. இந்த விமர்சனங்கள் காரணமாக இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகும் தவெகவின் சட்டமன்ற பலம் ஏன் நிலையாகவே இல்லை என்ற கேள்வியும் எழுகிறது.
107 ஆக சரியும்
சட்டசபையில் தவெகவின் பலம் 107 ஆக இருந்தது. அண்மையில் தாராபுரம், மதுராந்ததகம் ஆகிய இரண்டு தொகுதிகளை வென்ற தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்தது. இப்போது மீண்டும் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் பாபு காலமானதை அடுத்து தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 108 ஆக குறைந்துள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது எம்எல்ஏ பதவியை ஒரு வேளை ராஜினாமா செய்தால் அல்லது நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பதவி பறிபோனால், தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மறுபடியும் 107 ஆக சரிந்துவிடும் அபாயம் உள்ளது.
ஏற்ற இறக்கம்
தவெவை பொறுத்தவரை இரண்டு இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற பலம் உயர்ந்தாலும்,தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்கிறார்கள். என்னதான் புதிய எம்.எல்.ஏக்களை வென்றாலும், ஏற்கெனவே வென்ற எம்எல்ஏக்களை தக்கவைப்பது தவெகவுக்கு சவாலாக மாறிவிட்டதாகவே, அதிமுகவினர் மற்றும் திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள்.
தவெகவால் அதிகரிக்க முடியவில்லை
சட்டசபை தேர்தலில் 108 எம்.எல்.ஏக்களை வென்ற விஜய் தலைமையிலான தவெக கட்சி , இப்போது அந்த எண்ணிக்கையைத் தக்கவைக்க முடியாமல் தவிக்கிறது.
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார். அந்த முடிவால் கட்சியின் பலம் குறையும் என்பதை முன்கூட்டியே கணித்திருப்பார். ஆனால் அந்த தொகுதியில் தேர்தல் இன்னும் நடைபெறாமல் இருப்பதால், பலத்தை உடனடியாக தவெகவால் அதிகரிக்க முடியவில்லை.
விஜய் எதிர்கொள்ளும் விமர்சனங்கள்
இன்றைக்கு முதல்வர் விஜய் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறார். குறிப்பாக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம், துணை சபாநாயகர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் விவகாரம் போன்றவை பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொது வெளியில் அதிகமானால் வரப்போகும் இடைத்தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருச்சி கிழக்கு, கொளத்தூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் வரும் பொங்கலுக்கு பிறகு இடைத்தேர்தல் அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அந்த தேர்தலில் தவெக ஜெயிக்க வேண்டும் என்றால் அதற்கு விஜய்யின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.
தவெக வெல்ல முடியுமா
ஏனெனில் 2026 சட்டசபை தேர்தலில் தவெகவிற்கு விஜய்யின் முகம் வெற்றியைத் தேடித்தந்தது; ஆனால் வரும் இடைத்தேர்தலில் வெல்ல அது மட்டும் போதாது. அரசியலில் சாதூர்யமாக செயல்பட்டு, மக்கள் மத்தியிலும் சரி, கட்சியினர் மத்தியிலும் சரி விமர்சனங்கள் வராத அளவிற்கு எம்எல்ஏக்களை கொண்டு பயணிக்க வைக்க வேண்டும். ஒருவேளை வந்தாலும் உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அது தான் விஜய்யின் புகழை மக்கள் மத்தியில் அப்படியே நிலைத்திருக்க வைக்கும்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ராஜினாமா செய்வாரா
அண்மையில் இரண்டு தொகுதிகளை வென்ற தவெக, கொளத்தூர் தொகுதியை வேட்பாளர் இறந்ததால் இழந்தது. கள்ளக்குறிச்சியை பொறுத்தவரை இன்னும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஆனால் பிரச்சனை காரணமாகவே ராஜினாமா செய்தார் என்று வந்தால், அது தவெகவிற்கு பின்னடைவாகவே முடியும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.




Click it and Unblock the Notifications
