கழுத்தில் விரத மாலையுடன் கிளாஸ்ரூமில் நுழைந்த 2 மாணவர்கள்.. உடனே மதுரை பள்ளி நிர்வாகம் செய்த காரியம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் விரதத்திற்காக மாலை அணிந்து பள்ளிக்குச் சென்ற 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே அமர வைத்ததாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 3 நாட்களாக மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலையில் பல்லோட்டி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 6 மற்றும் 7-ம் வகுப்புகளில் சகோதரர்கள் இருவர் படித்து வருகிறார்கள். இந்த 2 மாணவர்களும் சமய வழிபாட்டுக்காக மாலை அணிந்துகொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். 2 பேருமே வழக்கமான ஸ்கூல் யூனிபார்மில்தான் சென்றிருக்கிறார்கள்.. விபூதி, குங்குமம் எதுவும் பூசாமல், கால்களில் ஷூ அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

Madurai School Controversy

கழுத்தில் மாலை

எனினும் கழுத்தில் மாலை அணிந்திருந்த காரணத்தால் இருவரையும் கிளாஸ்ரூமில் அனுமதிக்காமல் வெளியே உட்கார வைத்து விட்டதாம் பள்ளி நிர்வாகம்.. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இதே போன்று, மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கவேயில்லையாம்..

பள்ளிக்கு செல்வது, கல்வியை கற்பதற்காகத்தான். அப்படிச் சென்ற மாணவர்களை மாலை அணிந்திருந்த காரணத்தால் வகுப்பறைக்கு வெளியே உட்கார வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் சோஷியல் மீடியாவிலும் வெடித்து கிளம்பியது.. மாலை அணிந்ததற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்றும், அவர்கள் தொடர்ந்து வகுப்பறையில் உட்கார்ந்து படிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

மறுத்த பள்ளி நிர்வாகம்

ஆனால், இந்த விவகாரத்தை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.. இந்தப் புகார் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் காலணிகள் அணிந்து வர வேண்டும் என்றும், விபூதி, சந்தனம் உள்ளிட்டவற்றை அணிந்து வர அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது..

இதுகுறித்து தனியார் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஜெயபால் தந்த விளக்கத்தில், "பள்ளி முதல்வருடன் கலந்துரையாடுவதற்காக பெற்றோர் வரும்வரை காத்திருக்குமாறு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் வழக்கமான நெறிமுறைகள் மற்றும் மாணவர் நலன் தொடர்பான பொதுவான அறிவுறுத்தல்களின் ஒரு பகுதியாகவே, ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், விரதம் இருக்கும் காலங்களில் மாணவர்களின் உடல்நலம் மற்றும் வகுப்புகளுக்குத் தொடர்ந்து வருவதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, உடல்நலத்திற்கும் கல்விக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளுமாறு பொதுவாக அறிவுறுத்தப்பட்டது.

அரசு நிதியுதவி

ஆனால், பெற்றோர் இந்த அறிவுறுத்தல்களைத் தவறாகப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 25 ஆண்டுகால பள்ளியின் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழ்ந்ததில்லை.

அரசின் எவ்வித நிதி உதவியுமின்றி ஏழை, எளிய குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்கும் உயரிய நோக்கத்துடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மாணவர்களும் சமமான அன்புடனும் மரியாதையுடனும் நடத்தப்படுகிறது.

எந்தவொரு மாணவரின் மத நம்பிக்கையையோ, மதச் சுதந்திரத்தையோ பாதிக்கும் வகையிலான ஒழுக்கக் கட்டுப்பாடுகள் அல்லது நடவடிக்கைகளைப் பள்ளி நிர்வாகம் ஒருபோதும் மேற்கொண்டதில்லை" என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

போன வருஷமும் இப்படியே

ஆனால், பள்ளி நிர்வாகம் அளித்துள்ள இந்த விளக்கத்தை பெற்றோர் தரப்பு ஏற்கவில்லை. கடந்த ஆண்டும் இதே 2 மாணவர்களும் ஐயப்ப மாலை அணிந்து பள்ளிக்கு வந்தபோது பிரச்சினை ஏற்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இப்போதும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பும் வேறு சில பெற்றோர்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகின்றனர்

எனினும், மாணவர்கள் அணியும் மத அடையாளங்கள், பள்ளியின் சீருடை மற்றும் ஒழுங்கு விதிகள் தொடர்பாக எழுந்துள்ள இந்த விவகாரத்தில் 2 தரப்பின் கருத்துகளும் கவனத்தை பெற்றுள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+