அரியலூரில் பட்டியலின ஆசிரியர்கள் பயன்படுத்தும் பள்ளி மேசையில் மனிதக்கழிவு.. விசாரணைக்கு உத்தரவு!
அரியலூர்: கீழ்வெளி அரசுப் பள்ளியில் பட்டியலின சமூக ஆசிரியர்கள் பயன்படுத்தும் அறையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்த மாநில எஸ்.சி., எஸ்.டி, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சாதி ரீதியாக ஆசிரியர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விசாரணை நடத்தி டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும், காவல்துறை நடவடிக்கைகளை ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 260க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் சாதி ரீதியான கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனை மாணவர்களிடமும் ஆசிரியர்கள் வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் நவம்பர் 10ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்ட போது பட்டியலின சமூக ஆசிரியர்கள் பயன்படுத்தும் அறையில் உள்ள மேசையில் மனிதக்கழிவு வீசப்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கண்ணதாசன் என்பவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன்பின் பள்ளியில் விசாரணை நடத்திய அவர், காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஆய்வக உதவியாளர் கண்ணதாசன், சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே பள்ளியில் பணியாற்றிய 5 பட்டியலின ஆசிரியர்களை பிற சமூகங்களை சேர்ந்த 12 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் பள்ளியில் சாதி ரீதியாக கருத்து வேறுபாடு கொண்ட அனைத்து ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும், ஆய்வக அறையில் மனிதக்கழிவு வீசிய நபர்களை கைது செய்ய வேண்டும், பள்ளிக்கு இரவு நேர காவலர் நியமிக்க வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்களும், பெற்றோரும் 2 நாட்களாக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 நாட்களாக 200க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இந்த விவகாரம் அப்பகுதியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சூழலில், கீழ்வெளி அரசுப் பள்ளியில் பட்டியலின சமூக ஆசிரியர்கள் பயன்படுத்தும் அறையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்த மாநில எஸ்.சி., எஸ்.டி, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் சாதி ரீதியாக ஆசிரியர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விசாரணை நடத்தி டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும், காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பாக ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
