ஆட்சியரை சேம்பருக்கு அழைத்து 1 மணிநேரம் பேசிய நீதிபதி சுவாமிநாதன்? உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரிக்கை
மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் மாவட்ட ஆட்சியரை சேம்பருக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று மதுரையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார். ஆட்சியரை தனியாக சேம்பருக்கு அழைத்து விசாரித்திருந்தால் அது குறித்து தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் நேற்றைய தினம் தீபம் ஏற்றப்பட்டது. இந்த ஒரு ஆண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் நடந்த வழக்கிலும் கூட அதற்காகவே நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும், தீபம் அங்கு ஏற்றப்படவில்லை. மாறாக வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.

ஆட்சியர் விளக்கம்
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவே நடவடிக்கை எடுத்ததாகவும் இருப்பினும் கோயில் நிர்வாகம் உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபத்தை ஏற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மதுரையில் இந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
அதிர்ச்சி செய்தி
இது குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மேலும் கூறுகையில், "மதுரை மாவட்ட ஆட்சியர் தீபம் ஏற்றாதது குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வருவதற்கான வாய்ப்பு சட்டப்படி இல்லை. ஆட்சியர் தாக்கல் செய்ய அறிக்கையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி இருக்கிறது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன், சுமதி அமர்வில் விசாரணைக்கு ஆஜரான பின்னர், நீதிபதி சுவாமிநாதன் தன்னை சேம்பருக்கு அழைத்து உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுமாறு தெரிவித்ததாக கூறியுள்ளார். 1.45 மணி நேரம் நீதிபதி சேம்பரில் இருந்தாரா ஆட்சியர்? ஆட்சியரை இப்படி தனியாக அழைத்து பேசியது தொடர்பாக நீதிபதி தனது உத்தரவில் எங்கேயும் குறிப்பிடவில்லை.
விசாரிக்க வேண்டும்
நீதிபதி செய்தது சட்ட விதிமீறல். வெளிப்படைத்தன்மையுடன் தான் நீதிபதிகள் செயல்பட வேண்டும். இது நீதித்துறையின் மாண்பை குலைக்கும் செயல். நீதிபதி சுவாமிநாதன் தனியாக ஆட்சியரை அழைத்து பேசியது குறித்து நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட வேண்டும். தலைமை நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதியிடம் அறிக்கை கேட்க வேண்டும்.
உச்ச நீதிமன்றமும் ஆட்சியரின் அறிக்கையில் உள்ள இந்த தகவல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். முக்கியமான வழக்கில் ஆட்சியரை தனியாக அழைத்து பேச வேண்டிய தேவை என்ன? நீதித்துறை மாண்பு சீர்குலையும் என்பதால் நீதிபதி சுவாமிநாதன் இது குறித்து விளக்கம் தர வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்ற நிர்வாகம் வெளிப்படையாக நடக்க வேண்டும். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இது குறித்து அவர் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். எனவே, அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது. மன்னிப்பு கோரினால் அந்த மன்னிப்பை ஏற்பது தான் நீதிமன்றம் வழக்கம்.
திட்டமிட்டு நீதிமன்ற உத்தரவை ஆட்சியர் நிறைவேற்றாமல் இல்லை. அதற்கான ஏற்பாடுகளையே அவர் செய்திருந்தார். அதேநேரம் கோவில் தேவஸ்தானம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. ஏன் தேவையான நபர்களை கோவில் நிர்வாகம் கொடுக்கவில்லை என்பது தொடர்பான விளக்கத்தை அவர்கள் கொடுக்க வேண்டும். மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனாலும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மாவட்ட ஆட்சியர் அந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். இதன் காரணமாகவே ஆட்சியர் தேவையான முயற்சிகளை எடுத்தார்" என்றார்.




Click it and Unblock the Notifications
