தமிழகத்திற்கு வரும் மெகா முதலீடு! ரூ.868 கோடியில் புதிய ஆலை.. 1200 விவசாயிகளுடன் கைகோர்க்கும் பெப்சி
சென்னை: தனது பிராண்டுகளில் ஸ்நாக்ஸ் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் ரூ.868 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க பெப்சிகோ இந்தியா முடிவெடுத்துள்ளது.. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமையவுள்ள இந்த ஆலையில் லேஸ், குர்குரே உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகள் தயாரிக்கப்பட உள்ளன.
உலகின் முன்னணி உணவு மற்றும் கூல் டிரிங்க்ஸ் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பெப்சிகோ, 1990கள் முதலே இந்திய மார்கெட்டில் உள்ளது. இந்திய சந்தையில் மிக முக்கியமான இடத்தை பெப்சிகோ பிடித்துள்ளது. சமீப காலமாகவே இந்தியாவில் தனது இருப்பை மேலும் விரிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரூ.5,700 கோடி முதலீடு
இதற்காக இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.5,700 கோடி முதலீடு செய்ய பெப்சிகோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தமிழகத்தில் சுமார் ரூ.838 கோடி ரூபாய் மதிப்பில் மிக பெரிய ஆலையை நிறுவன பெப்சிகோ முடிவு செய்துள்ளது. மணப்பாறையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 28 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் முடிந்து, 2028 ஜூலை மாதத்துக்குள் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெப்சிகோ
தென்னிந்தியாவில் தனது உற்பத்தி மற்றும் சப்ளை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை மேற்கொள்வதாக பெப்சிகோ தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் நவீன உற்பத்தி வசதிகளுடன், பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு வசதிகளும் அமைக்கப்பட உள்ளன. தென்னிந்தியா என்பது பெப்சிகோ நிறுவனத்திற்கு முக்கிய சந்தையாக மாறியுள்ள நிலையில், இந்த ஆலை தேவையை பூர்த்தி செய்ய உதவும். இதன் மூலம் போக்குவரத்து மற்றும் சப்ளை செலவுகளை குறைப்பதுடன், பொருட்களை விரைவாக சந்தைக்கு கொண்டு செல்லவும் முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து பெப்சிகோ இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிஇஓ ஜாக்ருத் கோடேச்சா கூறுகையில், "தென்னிந்தியா பெப்சிகோவுக்கு மிக முக்கியமான சந்தையாகும். இங்கு வலுவான நுகர்வோர் சந்தை உள்ளது. எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதை நம்பியே இந்த முதலீட்டை நாங்கள் மேற்கொள்கிறோம்" என்றார்.
விவசாயிகளுடன் இணைந்து செயல்பட முடிவு
ஆலை அமைப்பதுடன் தமிழகத்தில் விவசாயிகளுடனான இணைந்து செயல்படவும் பெப்சிகோ திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 1,200க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்து, 1,500 ஏக்கர் பரப்பளவில் சிப்ஸ் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கை பயிரிட டார்கெட் நிர்ணயித்துள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு மண் பரிசோதனை, விவசாய இயந்திரமயமாக்கல், சொட்டுநீர் உள்ளிட்ட நுண்ணீர் பாசன வசதிகள் மூலம் உதவ திட்டமிட்டுள்ளது. இதனால் விளைச்சலை அதிகரிப்பதுடன் சரியான விவசாய முறைகளையும் ஊக்குவிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா மார்கெட்
சர்வதேச அளவில் பார்த்தோம் என்றால் பெப்சிகோவின் முக்கியமான சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அசாமின் நல்பாரியில் 44.2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட உணவு தயாரிப்பு ஆலையை நிறுவனம் திறந்தது. இந்த ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனிலும் பானங்களை தயாரிக்கும் ஆலையை தொடங்கியது.
இந்த சூழலில் தான் அடுத்த கட்டமாக தென்னிந்தியாவை டார்கெட் செய்யும் வகையில் திருச்சி மணப்பாறையில் புதிய ஆலையை அமைக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
